பரந்துார் ஏர்போர்ட் நிலத்திற்கான இழப்பீடு...ஏக்கருக்கு ரூ.2.57 கோடி: அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை:பரந்துார் புதிய விமான நிலையம் அமைய கையகப்படுத்தப்படும் நிலத்திற்கான இழப்பீட்டு தொகையை, ஏக்கருக்கு 35 லட்சம் ரூபாய் முதல், 2.57 கோடி ரூபாய் வரை நிர்ணயம் செய்து, தமிழக அரசு, அரசாணை பிறப்பித்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் நிலம் கையகப்படுத்தும் பணி துவக்கும் வகையில், இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
டில்லி, தெலுங்கானா ைஹதராபாத் விமான நிலையங்களுடன் ஒப்பிடும்போது, சென்னை விமான நிலையம் அளவில் சிறியது. இருப்பினும், விமான நிலையத்தை ஆண்டுக்கு, 2 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்பதால், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆனால், விரிவாக்கம் செய்ய தேவையான இட வசதி இல்லை.
எனவே, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில், சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தை, பொது- தனியார் கூட்டு முயற்சியில், 29,150 கோடி ரூபாயில் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
விமான நிலைய திட்டத்திற்கு, பரந்துார் மற்றும் அதை சுற்றிய, 20 கிராமங்களில், 5,320 ஏக்கர் நிலம் தேவை. அதில், 3,331 ஏக்கர் தனியார் வசம் உள்ள பட்டா நிலம்; மீதம் அரசுக்கு சொந்தமானவை.
பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு இட அனுமதி மற்றும் கொள்கை அளவிலான ஒப்புதல் என, இரு அனுமதிகளும் மத்திய அரசிடம் இருந்து கிடைத்துவிட்டன. தற்போது விமான நிலையம் அமைக்க கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோரும் பணிகள் நடக்கின்றன.
இத்திட்டத்தை, 'டிட்கோ' எனப்படும் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் செயல்படுத்துகிறது.
பரந்துார் விமான நிலையத்திற்காக, 3,331 ஏக்கர் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்படும் என, அரசு அறிவித்துள்ளது. இதற்கு சில கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி, எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். போராட்டம், 1,000 நாட்களையும் கடந்தது. அரசு பல கட்ட பேச்சு நடத்தி தீர்வு கண்டது.
இந்நிலையில், கையகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலங்களுக்கான இழப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒரு ஏக்கருக்கு 35 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 2.57 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது