எருமப்பட்டி அரசு பள்ளிக்கு சென்று மாணவருடன் கலந்துரையாடிய ஆட்சியர் துர்காமூர்த்தி

எருமப்பட்டி அரசு பள்ளிக்கு சென்று மாணவருடன் கலந்துரையாடிய ஆட்சியர் துர்காமூர்த்தி
மாணவரின் கோரிக்கையை ஏற்று அரசு பள்ளிக்கு சென்ற ஆட்சியர் கண்கலங்கிய நெகிழ்ச்சி சம்பவம்

ஆட்சியர் பள்ளிக்கு சென்று, மாணவர் விஜய் படிக்கும் வகுப்பறையில் அவரை சந்தித்து கலந்துரையாடினார்.

மாணவன், ஆட்சியரிடம் போட்டித் தேர்வுகளை எந்த மொழியில் எழுதினீர்கள்? என கேட்டான்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர் விஜய், ஆட்சியர் துர்காமூர்த்திக்கு கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பி இருந்தார்.

அதில் 'வாட்ஸ்-அப் குழுக்களில் பகிரப்பட்ட குறுஞ்செய்தி மூலம் ஆட்சியர் பணிக்கு நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்து வந்துள்ளீர்கள் என்பதை நான் அறிந்தேன். எனவே தாங்கள் எங்களது பள்ளிக்கு வரவேண்டும்' என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

அந்த மாணவரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நேற்று எருமப்பட்டி பேரூராட்சியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஆட்சியர், அங்குள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று, மாணவர் விஜய் படிக்கும் வகுப்பறையில் அவரை சந்தித்து கலந்துரையாடினார்.

ஆட்சியர் துர்காமூர்த்தி, மாணவன் எழுதிய கடிதத்தை படித்தபோது கண்கலங்கினார்.

மழைக்காக காத்திருக்கும் பயிர்களைப்போல உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம் என்று மாணவன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை வாசித்த அவர், மாணவனை பாராட்டி புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

அப்போது மாணவன், ஆட்சியரிடம் போட்டித் தேர்வுகளை எந்த மொழியில் எழுதினீர்கள்? என கேட்டான். அதற்கு ஆட்சியர், ஆங்கிலத்தில் எழுதினேன் என்றார்.

உடனே ஏன் தமிழில் எழுத முடியாதா? என மாணவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆட்சியர், 'தாராளமாக தமிழில், நமது தாய்மொழியில் எழுதலாம். இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வு பெற்றவர்கள், பலர் தங்கள் தாய்மொழியில் எழுதி உள்ளார்கள். அதிலும் தமிழில் எழுதியவர்கள் அதிகமானவர்கள் உள்ளனர்' என்றார். இவ்வாறு மாணவர் மற்றும் ஆட்சியர் இடையே கலந்துரையாடல் சுவாரசியமாக நடந்தது.

தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர், நீங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு, பல்வேறு சாதனையாளர்களாக வரவேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். மேலும் தன்னை பள்ளிக்கு அழைத்த மாணவருக்கு ஆட்சியர் புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கியும் பாராட்டினார்