ரயிலில் தவறவிட்ட ரூ.3.2 லட்சம் பயணியிடம் ஒப்படைப்பு: ரயில்வே போலீசாருக்கு பாராட்டு

பால்கர்: மஹாராஷ்டிராவில் ரயிலில் தவறவிட்ட ரூ.3.2 லட்சம் ரொக்கம் இருந்த பை,பயணியிடம் ஒப்படைக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மஹாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள போய்சர் ரயில் நிலையம் உள்ளது. இங்குள்ள ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட ரூ.3.2 லட்சத்தை ரயில்வே போலீசார் மீட்டு உரிமையுள்ள பயணியிடம் ஒப்படைத்தனர். ஒப்படைத்த ரயில்வே போலீஸ் பணியாளர்களுக்கு ரயில்வே நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
போய்சர் ரயில் நிலையத்தில் நேற்று காலை 8 மணி அளவில் சர்ச்கேட் செல்லும் ரயிலில் இருந்து அபிஷேக் சுக்லா 30, என்ற பயணி இறங்கி உள்ளார். அவர் கொண்டுவந்த ரூ.3.2 லட்சம் ரொக்கம் கொண்ட பையை தவறவிட்டதாக, உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்த நிலையில், நாங்கள் அபிஷேக் சுக்லா பயணித்த ரயிலில் சோதனையிட்டோம். அவர் கூறிய அடையாளத்தின் அடிப்படையில் கண்டுபிடித்து பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்துவிட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.