துன்பத்தை வெல்!

'எங்கு திரும்பினாலும் தோல்வி என்ன வாழ்க்கை இது?'
வாழ்வோடு போராடி சலித்த ஒருவன் ஞானி ஒருவரை சந்தித்தான்.
"குருவே, எனக்கு ஏன் இந்த நிலைமை? வெள்ளம்போல பிரச்னைகள் என்னை மூழ்கடிக்கின்றன. இனி என்னால் ஒருபோதும் ஊருக்குத் திரும்பவே முடியாது'' என்று குரு முன் நின்று புலம்பினான் அவன்.
குரு அவனைக் கனிவோடு பார்த்தார்.
தன் அறைக்கு அழைத்துச் சென்று ஆசுவாசப்படுத்தினார்.
அலமாரியில் இருந்த அலங்காரமான ஒரு பெட்டியை எடுத்து வெளியே வைத்தார்.
மகனே, இது சாதாரணப் பெட்டியல்ல. சகல பிரச்னைகளையும் தீர்க்கும் மந்திரப்பெட்டி. நீ உன் பிரச்னைகள் ஒவ்வொன்றாகச் சொல். அவற்றை இந்தப் பெட்டியில் போட்டுப் பூட்டிவிடுகிறேன். அதன் பின் நீ நிம்மதியாக வாழலாம்'' என்றார்.
குருவின் மீது நம்பிக்கை வைத்துத் தன் பிரச்னைகளை சொல்லத் தொடங்கினான்.
நான் தொழில் செய்துகொண்டிருந்தேன். அது பெரும் நஷ்டம் அடைந்துவிட்டது. தொழிலுக்காகக் கடன் கொடுத்தவர்கள் எல்லோரும் என்னை நெருக்குகிறார்கள். அவகாசம் கேட்டால்கூடத் தரமறுக்கிறார்கள்.''
குரு, அவன் சொல்லிமுடித்ததும் காற்றில் எதையோ பற்றுவதுபோல் சைகை செய்து அதைப் பெட்டியில் போடுவதைப்போலப் பாவனை செய்தார்.
"ம், அடுத்து...'' என்றார்.
"என் மனைவிக்கு இவை எல்லாம் பிடிக்கவேயில்லை. வீட்டில் அடிக்கடி சண்டை. நிம்மதியாக ஒருநாள் போகமாட்டேன் என்கிறது'' என்றான்.
மீண்டும் அவர் அதேபோலச் செய்தார்.
"ம், அடுத்து...''
"என் பிள்ளைகள் என்னை மதிப்பதேயில்லை. இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டுமா என்றிருக்கிறது.''
குரு மீண்டும் காற்றில் எதையோ பிடித்துப் பெட்டியில் அடைத்தார். பின்பு,
"உன் பிரச்னைகள் எல்லாம் இந்தப் பெட்டியில் அடைக்கப்பட்டுவிட்டன. இனி இவை உன்னைத் தொடராது. எனவே நீ, இங்கு ஒருநாள் தங்கியிருந்துவிட்டு மறுநாள் உன் ஊருக்கே போகலாம்'' என்றார்.
அவனும் அப்படியே ஒருநாள் ஆசிரமத்தில் தங்கி, பின் தன் ஊருக்குப் புறப்பட்டான். இந்த ஒரு நாளில் அவன் மனம் கொஞ்சம் தெளிவடைந்திருந்தது. உண்மையிலேயே, குரு தன் பிரச்னைகளை அந்தப் பெட்டியில் அடைத்துவிட்டார் என்று நம்பினான்.
ஊருக்குத் திரும்பினான். ஊரின் எல்லையிலேயே நின்றிருந்த ஓர் உறவுக்காரர், அவனைக் கண்டதும்
ஓடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டார்.
"நல்லா இருக்கியா, எங்கப்பா போன? உன்னைக் காணாம தவிச்சுப் போயிட்டோம்'' என்றார்.
அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
'அட, இவர் நம்மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பவரா? இத்தனை நாள்களில் ஒருநாள்கூட இதை அவர் வெளிப்படுத்தியதே இல்லையே? அதுசரி, நானும்தான் வெளிப்படுத்தியதில்லை. எல்லாம் அந்த மந்திரப் பெட்டியின் மகிமை' என்று நினைத்துக்கொண்டான்.
கொஞ்சம் தூரம் நடந்ததுமே, அவனுக்குக் கடன்கொடுத்த நபர் ஒருவர் எதிர்ப்பட்டார். வழக்கமாக அவரைக் கண்டதும் பயந்து மறைந்து ஓடும் அவன், இந்தமுறை பயப்படவில்லை. அதுதான் குரு அவன் பிரச்னைகளை அடைத்துவிட்டாரே, நேருக்கு நேராக அவரைச் சந்தித்தான்.
கடன்கொடுத்தவரும், அவன் நேருக்கு நேராக வந்து நிற்பதுகண்டு ஆச்சரியப்பட்டார். நேற்றெல்லாம் அவன் ஊரைவிட்டு ஓடிவிட்டான் என்று கேள்விப்பட்டு, அவன் வீட்டுக்குப் போய் விசாரித்து உறுதி செய்துகொண்டார். 'மொத்த பணமும் போச்சே' என்கிற கவலை. மற்றொருபக்கம், 'ஒரு குடும்பத்தையே தெருவில் நிறுத்திவிட்டானே ' என்கிற வருத்தமும் நிறைந்திருந்தது. அவனை மீண்டும் கண்டது அவருக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தது.
"என்னப்பா நீ? பணம் கொடுக்காமலும்,
பதில் சொல்லாமலும் நழுவி ஓடிக்கொண்டிருந்தாயே என்று நினைத்து கொஞ்சம் கறாராய்ப் பேசினேனே தவிர வேறு ஒன்றும் இல்லை. மனதில் வைத்துக்கொள்ளாதே. உன் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் பணத்தைத் திருப்பிக் கொடு" என்று சொன்னார்.
இதைக் கேட்டதும் அவன் மனம் நெகிழ்ந்தது.
"ஐயா,மன்னித்துவிடுங்கள். நான் செய்த சில தவறுகளால் தொழிலில் பணத்தை இழந்துவிட்டேன். கூடிய சீக்கிரம் நல்ல முறையில் தொழில் செய்து, உங்கள் கடனை அடைந்துவிடுகிறேன்" என்றான். அவரும் 'சரி' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
மந்திரப் பெட்டியின் மேல் அவனுக்கு இருந்த நம்பிக்கை இப்போது இரட்டிப்பாகி விட்டது. ஆனாலும், 'சும்மாவே சண்டையிடும் மனைவி என்ன சொல்வாளோ' என்று பயந்தான். வீட்டை நோக்கிப் போனான்.
அவனைக் கண்டதும் அவன் மனைவி ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தாள். அவனை உபசரித்து," சாதாரணப் பணப்பிரச்னைக்காக நீங்கள் இப்படி வருந்தலாமா? இனி எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் உணவு உண்ண வாருங்கள்" என்றாள்.
பிள்ளைகளும், அப்பா வந்துவிட்டதை அறிந்து வீடு திரும்பி அவரைக் கட்டிக்கொண்டன. அவனுக்கு எல்லாம் புதியதாக இருந்தது. அன்றைய இரவில் தீர்க்கமாக ஆலோசித்து மறுநாள், மீண்டும் தொழில் தொடங்கினான்.
எதிர்பார்த்ததைவிடத் தொழில் சிறப்பாக நடந்தது. கடனை அடைத்து முடித்தான். கொஞ்சம் பணமும் சேர்ந்தது.
இவற்றுக்கெல்லாம் காரணமான குருவைச் சந்தித்து நன்றிகூற விரும்பினான்.
ஒருநாள் காணிக்கைகளை எடுத்து கொண்டு குருவினைக் காணச் சென்றான். காணிக்கைகளை குருவிடம் சமர்ப்பித்து வணங்கினான்.
"குருவே, அன்று நீங்கள் மட்டும் என் பிரச்னைகளை அந்தப் பெட்டியில் அடைக்காவிட்டால், நான் இந்த நேரம் என்ன ஆகியிருப்பேன் என்றே தெரியவில்லை. உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்..." என்று நெகிழ்ச்சியோடு கூறினான்.
குரு சிரித்துக்கொண்டே, "மகனே, அந்தப் பெட்டியில் உண்மையில் நான் எதையும் அடைக்கவில்லை. உன் பிரச்னைகளைக் கேட்டுக்கொண்டேன், அவ்வளவுதான். நீ பெருங்குழப்பத்தில் இருந்தாய். குழப்பத்தில் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியாக இருக்காது. மேலும், நீ பிரச்னைகளில் இருந்து தப்பிப் போக நினைத்தாய்.
அது தவறு. மாறாக, பிரச்னைகளில் இருந்து விலகி நின்று யோசித்தால் மட்டுமே அதைத் தீர்க்கமுடியும்.
உன் பிரச்னைகள் உன்னைவிட்டு நீங்கிவிட்டன என்று நான் சொன்னதை நம்பி, நீ முற்றிலும் அதிலிருந்து விலகி நின்று அவற்றைப் பார்த்தாய்.
அவற்றின் தன்மைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு தீர்க்க முனைந்தாய், அதில் வெற்றியும் பெற்றாய். இதில் என் மாயம் எதுவும் இல்லை" என்றார் குரு.
அவன் கண்ணீரோடு குருவைப் பணிந்தான்.
துன்பங்கள் சூழ்ந்து அழுத்தும்போது இது சுமையே அல்ல என்று துணிச்சலுடன் சொல்லுங்கள்.
துன்பம் சிதறி ஓடுவதை உங்கள் அறிவால் உணர்வீர்கள். துன்பத்தில் இருந்து நிரந்தர விடுதலை பெறுவீர்கள்.