ஜெயிலில் கூட இவ்வளவு கண்டிஷன் இருக்காது போலயே! பெங்களூரில் ஓனர் போட்ட கட்டுப்பாடுகள்! அதிர்ந்த இளைஞர்

ஜெயிலில் கூட இவ்வளவு கண்டிஷன் இருக்காது போலயே! பெங்களூரில் ஓனர் போட்ட கட்டுப்பாடுகள்! அதிர்ந்த இளைஞர்
பெங்களூரில் ஓனர் போட்ட கட்டுப்பாடுகள்! அதிர்ந்த இளைஞர்

பெங்களூர்: பெங்களூரில் வாடகை வீடுகளுக்குப் போடப்படும் கண்டிஷன்களை கேட்டால் நமக்கு நிச்சயம் அதிர்ச்சியாகவே இருக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்கும் அதைச் செய்யக்கூடாது.. இதைச் செய்யக்கூடாது என கண்டிஷன்களை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்படி பெங்களூரில் வசிக்கும் இளைஞர் ஒருவருக்கு அவரது ஓனர் போட்ட கட்டுப்பாடுகள் குறித்த தகவல்களை அவர் ரெட்டிட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

வாடகை வீட்டில் இருக்கும் சிக்கல்கள் அனைவருக்கும் தெரிந்தே இருக்கும். ஓனர்கள் காட்டும் தேவையில்லாத கெடுபிடிகள் காரணமாகவே பலரும் எப்படியாவது வீடு வாங்க வேண்டும் என்ற முடிவை எடுக்கிறார்கள். அந்தளவுக்குத் தேவையில்லாத கெடுபிடிகள் இருக்கும். ஆணி அடிப்பது முதல் வீட்டுக்கு வரும் உறவினர்கள் வரை கூட கண்டிஷன்களை அடுக்கிக் கொண்டே போவார்கள்.

பெங்களூர் வாடகை வீட்டுப் பிரச்சனை

அந்தளவுக்கு வாடகை வீட்டில் இருப்பது சிக்கலான விஷயம். அதிலும் நமது அண்டை மாநிலமான கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் இது எங்கோ வேற லெவலுக்கு போய் இருக்கும். அங்கு வாடகைக்கு வீடு எடுப்பதே கிட்டதட்ட ஒரு நுழைவுத் தேர்வு எழுதுவது போலத் தான் இருக்கும். ஓனர்கள் கேட்கும் பல நூறு கேள்விகளுக்கு அவர்களைக் குஷிப்படுத்தும் பதிலைக் கொடுத்தால் மட்டுமே வீடு கிடைக்கும். அது முடிந்த பிறகு அடுத்து அட்வான்ஸ் என ஒரு தொகையைச் சொல்வார்கள்.. அதைக் கேட்டால் பெரும்பாலானோருக்கு நிச்சயம் தலை சுற்றிவிடும்

லிஸ்ட் நீண்டு கொண்டே இருக்கும்

அதையும் எப்படியாவது புரட்டிக் கொடுத்துவிட்டால்.. அதன் பிறகே சாவியை கொடுப்பார்கள். வீட்டில் குடியேறியவுடன் பிரச்சனை எல்லாம் முடிந்தது என நீங்கள் நினைக்கலாம்.. ஆனால், அப்படி இல்லை.. பிரச்சனை 2.0 அப்போது தான் ஆரம்பிக்கும். வீட்டில் தங்க ஏகப்பட்ட கண்டிஷன்களை ஓனர்கள் விதிப்பார்கள். அதைச் செய்யக்கூடாது, இதைச் செய்யக்கூடாது என லிஸ்ட் நீண்ட கொண்டே இருக்கும். அப்படித் தான் இங்கு பெங்களூரில் வாடகைக்கு இருக்கும் ஒரு நபருக்கு அவரது ஓனர் ஏகப்பட்ட கண்டிஷன்களை மெசேஜ்ஜில் அனுப்பி இருக்கிறார்.

ஏகப்பட்ட கண்டிஷன்கள்

அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்த அந்த நபர் தனது ரெட்டிட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்தியாவின் 'ஐடி தலைநகரம்' என்று அழைக்கப்பட்டாலும் பெங்களூரில் வாடகை வீடு பிரச்சனைகள் எந்தளவுக்கு மோசமாகப் போய்க் கொண்டு இருக்கிறது என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

எல்லா வீட்டு உரிமையாளர்களும் ஏன் இப்படி இருக்கிறார்கள்?" என்று தலைப்பில் அவர் அந்த ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளார். அதில் வீட்டு வாடகை, தண்ணீர் கட்டணம் குறித்து தகவல்கள் உள்ளன. அவை எல்லாம் ஓகே.. ஆனால், அதன் பிறகு தான் ஒரு லிஸ்ட் வந்துள்ளது. அதாவது மழை பெய்யும் போது ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும், கேட்டை மூடி வைக்க வேண்டும், டெலிவரி செய்பவர்களைத் தரை தளத்திற்கு மேல் அனுமதிக்கக் கூடாது, ஒரு படுக்கையறை கொண்ட வீட்டிற்கு ஒரு பைக் மட்டுமே பார்கிங்கில் நிறுத்த அனுமதிக்கப்படும் என ஏகப்பட்ட மெசேஜ்கள் உள்ளன

நெட்டிசன்கள்

இதைத் தான் அவர் ஸ்கிரீன்ஷாட் எடுத்து ரெட்டிட்டில் பகிர்ந்திருக்கிறார். இது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் பெங்களூரில் பெரும்பாலான வாடகை வீடுகளில் இதுபோன்ற கண்டிஷன்களை தவிர்க்க முடிவதில்லை என்றும் ஓனர்கள் எல்லை மீறி கண்டிஷன்களை போடுவதாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

சமீப காலமாகவே பெங்களூரில் வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு வருபவர்களுக்குப் பல நிபந்தனைகளை விதிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நெட்டிசன்கள் இதில் வெறுத்துப் போய் புலம்புவதும் கூட அதிகரித்தே வருகிறது. அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்து வருகிறது.