வறட்சியிலும் வளரும் கொல்லிமலை அன்னாசி....

கொல்லிமலை அன்னாசி பழ சாகுபடி குறித்து, திருவள்ளூர் காளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பயிற்சி வழக்கறிஞர் எம்.ராஜிவ்காந்தி கூறியதாவது:
எனக்கு சொந்தமான மலை மண் நிலத்தில், வரப்பு பயிராக கொல்லிமலை பகுதியில் விளையும் அன்னாசி பழம் சாகுபடி செய்துள்ளேன். இது, ஈர களி மண்ணை தவிர, மலை மண், செம்மண் உள்ளிட்ட பல்வேறு விதமான மண் சார்ந்த நிலங்களில் சாகுபடி செய்யலாம்.
இந்த அன்னாசி பழ சாகுபடிக்கு அதிக அளவில் தண்ணீர் தேவை இருக்காது. குறைந்த தண்ணீரை பயன்படுத்தி அன்னாசி சாகுபடி செய்யலாம். மேலும், வறண்ட நிலங்களிலும் சாகுபடிக்கு உகந்தவையாக உள்ளது.
ஒரு முறை அன்னாசி செடியை நட்டுவிட்டால் போதும். ஒரு ஆண்டு கழித்து அன்னாசி பழங்களை அறுவடை செய்துக்கொண்டே இருக்கலாம்.
குறிப்பாக, கொல்லி மலை அன்னாசி சாகுபடி செய்யும் போது, நாம் சாகுபடி செய்ய விருக்கும் மண்ணில் இருந்து, பழச்செடிகளை உற்பத்தி செய்து நடவு செய்ய வேண்டும். அப்போது தான், அன்னாசியில் அதிக மகசூல் பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்