ஏமனில் கேரள செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனை தேதி அறிவிப்பு

ஏமன் நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை தொடர்பான வழக்கில் கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவரை மீட்பதற்கான பல்வேறு முயற்சிகளை அவரது குடும்பத்தினர் எடுத்து வரும் நிலையில், அவரது மரண தண்டனை ஜூலை 16ஆம் தேதி நிறைவேற்றப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மனித உரிமை ஆர்வலரும், நிமிஷா பிரியாவின் தாயார் சார்பாக வழக்கைக் கையாளும் அதிகாரம் கொண்டவருமான சாமுவேல் ஜெரோம் தெரிவித்தார்.
நிமிஷா பிரியா தற்போது ஏமன் தலைநகரான சனாவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை மீட்பதற்கு 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்' என்ற குழுவும், நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரியும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தனர். பிரேமா குமாரி, இதற்காக இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏமன் சென்றார்.
ஏமன் நாட்டில் ஷரியத் சட்டம் நடைமுறையில் இருப்பதால், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கு 'ப்ளட் மணி (Blood Money)' என்னும் இழப்பீட்டுத் தொகையைக் கொடுத்து மன்னிப்பு பெறுவதன் மூலம் மட்டுமே நிமிஷாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியும்.