இனி இதை செய்தால் தான் ரூ.6,000 கிசான் நிதி.... அரசு அதிரடி அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், பிரதம மந்திரி கௌரவ நிதித் திட்டம் (PMKISAN) தொடர்ந்து தவணைத் தொகைகளை பெறுவதற்கு தங்கள் நில விவரங்களை வேளாண் அடுக்கக திட்டத்தில் (AgriStack) பதிவு செய்வது கட்டாயமாகும். எனவே, விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண் துறை சார்ந்த அலுவலர்களைத் தொடர்பு கொண்டு கட்டணமின்றி பதிவு செய்து பயன்பெறுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டங்களில் பயன் பெறுவதற்கு தங்களது நில விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமதத்தினை தவிர்க்கும் வகையிலும் அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும் அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத் திட்டம் (AgriStack) செயல்படுத்தப்பட்டு வருகின்றது
தற்சமயம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் 113801 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். மேலும், அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பதிவு செய்திட அனைத்து கிராமங்களிலும் பதிவுகள் மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, விவசாயிகள் தங்களது ஆதார் எண் கைபேசி எண், நில உடைமை விவரங்கள் ஆகியவற்றை இணைத்திட தங்கள் பகுதி வேளாண்மைத் துறை தோட்டக்கலைத் துறை வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நில உடைமை விவரங்கள் இணைக்கப்பட்ட பின்னர் அனைத்து விவரங்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கப்படும். 2025-26ஆம் நிதி ஆண்டு முதல் பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டம் (PMKISAN) -ல் தொடர்ந்து தவணைத் தொகைகளை பெறுவதற்கு விவசாயிகளின் நில உடைமைகளை பதிவு செய்து அடையாள எண் பெறுவது கட்டாயம் ஆகும்.