இனிது இனிது வாழ்தல் இனிது!

கணவனும் மனைவியும் கட்டாயம் படிக்க வேண்டிய வாழ்க்கை வழிகாட்டி!)
பிரச்னைகள் வரும்போது, புத்தரும் காந்தியும் அதை எப்படி அணுகியிருப்பார்கள் என யோசியுங்கள்... வன்முறையற்ற, அன்பு அணுகுமுறை உங்களுக்கும்கூட சாத்தியம் என்று கடந்த இதழில் சொல்லியிருந்தேன். ‘புத்தராகவும், காந்தியாகவும் நடந்துக்கிறதென்ன அவ்வளவு சுலபமா... அதெல்லாம் நடக்கிற காரியமா?’ என்றார்கள் பலரும். புத்தர் மாதிரியோ, காந்தி மாதிரியோ நடந்து கொள்வது யாருக்கும் சாத்தியம்தான். ஆனால், அதற்கொரு முனைப்பு வேண்டும்!
அதெல்லாம் முடியாது என்கிறவர்களுக்கு ஒரு வழி இருக்கிறது. பெரிய முனைப்போ, முயற்சியோ தேவைப்படாத எளிய வழி அது. ‘தவிர்ப்பது’ என்பதே அந்த வழி. ஆங்கிலத்தில் ‘ரெஸ்ட்ரெயின்’ என்கிறோம்.
நம்மைக் கோபப்படுத்துகிற மாதிரி ஏதோ ஒன்று நடக்கிறது. உடனே கோபப்படுத்தியவர்களிடம் மோசமாக நடந்து கொள்கிறோம். நெகட்டிவாகவோ, அவர்களை தரக்குறைவாக விமர்சிக்கிறபடியோ, அதிகார தொனியிலோ நடந்து கொள்வோம். தவிர்ப்பது என்கிற கொள்கையைப் பின்பற்றத் தயாராகி விட்டீர்களானால், இப்படி எதையுமே செய்ய மாட்டீர்கள். இந்த டெக்னிக்கில் நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், உங்கள் பேச்சை, வார்த்தைகளை நீங்களே கவனிப்பது. என்ன பேசுகிறீர்கள் எனப் பாருங்கள். அதில் எத்தனை நெகட்டிவ் வார்த்தைகள், கட்டளைகள், விமர்சனங்கள் வந்து விழுகின்றன எனப் பார்த்து, அதை முதலில் நிறுத்துங்கள்.
‘என் கணவருக்கு என் மேல அன்பே இல்லை’ என்றோ, ‘என் குழந்தைகளுக்கு என் மேல் பாசமே இல்லை’ என்றோ, ‘என் மாமியாருக்கு என்னைக் கண்டாலே பிடிக்கிறதில்லை’ என்றோ புலம்புவது கூட நெகட்டிவானதுதான். ‘இதைச் செய்யாதே, அதைப் பண்ணாதே’ என நமது விருப்பத்துக்கேற்ப குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடந்து கொள்ளச் சொல்வதுகூட ஒருவகையில் கட்டளையிடுவதுதான். இதெல்லாம் எதிராளிக்கு உங்கள் மீது அன்பை வரவழைப்பதற்குப் பதிலாக எரிச்சலையே கொடுக்கும்.
புதிதாகத் திருமணமான சேரனும், அவரது மனைவி மதுமிதாவும் என்னை சந்திக்க வந்தார்கள். ‘என் மனைவிக்கு என்னைக் கண்டாலே பிடிக்கலை சார். கல்யாணத்துக்கு முன்னாடி எல்லார்கிட்டயும் கலகலப்பா பேசறதையும் குழந்தை மாதிரி நடந்துக்கிறதையும் நான் பார்த்திருக்கேன். கல்யாணத்துக்குப் பிறகு தலைகீழா மாறிட்டா. நான் பக்கத்துல வந்தாலே மிரண்டு போறா. அவ முகத்துல சிரிப்போ, அந்தக் குழந்தைத்தனமோ இல்லை. தனிமை விரும்பியா மாறிட்டா. என்ன பிரச்னைனு தெரியலை’ என்பது சேரனின் குற்றச்சாட்டு.
‘‘எப்பப் பார்த்தாலும் நெகட்டிவா பேசறாரு... எதைச் செய்தாலும் குற்றம், குறை கண்டுபிடிச்சு, கமெண்ட் அடிக்கிறாரு. எதையுமே அன்பா சொல்லாம அதிகாரமாத்தான் சொல்றாரு... அவரைப் பார்த்தாலே எனக்குப் பயமா இருக்கு சார். இதெல்லாம் எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி தெரியாது. இப்ப அதிர்ச்சியா இருக்கு... அதனாலதான் என்னை ஒரு வட்டத்துக்குள்ள சுருக்கிக்கிட்டேன். என்னால முன்ன மாதிரி இயல்பா இருக்க முடியலை’’ என்பது மதுமிதாவின் பதில். ஆணையிடுகிற மாதிரியோ, நெகட்டிவாகவோ, விமர்சிக்கிற மாதிரியோ பேசுவதை நிறுத்தினாலே மதுமிதாவிடம் பழைய மழலைத்தனத்தைப் பார்ப்பீர்கள் என்கிற ஒரே ஒரு அட்வைஸை மட்டும் சேரனுக்கு சொல்லி அனுப்பி வைத்தேன்.
அன்யோன்யமாகி விட்டதாக பிறகொரு நாள் தகவல் சொன்னார்கள். வாயை அடக்குவதென்பது எல்லோராலும் முடியாது. யார் என்ன சொன்னாலும் அதற்கொரு எதிர்வார்த்தை பேசினால்தான் திருப்தியடைவார்கள். முட்டியில் ஒரு சின்னக் கருவி கொண்டு தட்டினால், உடனே கால்கள் உதறும். பல பேருக்கு இப்படித்தான். யாரேனும் ஏதாவது சொல்லிவிட்டால், உடனடியாக வாய் துடிக்கும். உடனுக்குடன் திருப்பி திட்டுவதோ, விமர்சிப்பதோ மனமுதிர்ச்சியுள்ள மனிதர்கள் செய்கிற காரியமல்ல. அப்படிச் செய்கிறவர்கள் எந்த சிந்தனையும் இல்லாமல் நடந்து கொள்கிறவர்கள் என்றே அர்த்தம்.
இதை மாற்றிக் கொள்ளவும் ஒரு டெக்னிக் சொல்கிறேன்... உங்கள் துணை செய்கிற, பேசுகிற விஷயங்களுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கத் துடிக்கிற ஒவ்வொரு முறையும், ‘ஸ்லாகோ’ என்று சொல்லப் பழகுங்கள். Supportive, Loving, Accepting, Giving, Open என்பதன் முதல் எழுத்துகளைக் கோர்த்து உருவாகிய வார்த்தைதான் (SLAGO) ஸ்லாகோ!
நீங்கள் அடிக்கிற கமெண்ட் உங்கள் துணையை எந்த வகையிலாவது சப்போர்ட் செய்கிறதா? அதில் அன்பு தெரிகிறதா? உங்கள் துணையை அப்படியே ஏற்றுக்கொள்ள வைக்கிறதா? வாங்கி மட்டுமே பழகிய உங்களுக்கு திருப்பிக் கொடுப்பதும் அவசியம் என்பதை உணர வைக்கிறதா? திறந்த மனதுடன் பேச வைக்கிறதா? இவற்றை யோசியுங்கள். இந்த ஸ்லாகோ டெக்னிக் ஐரோப்பாவில் தம்பதியரிடையே ரொம்பவே பிரபலம்.
நீங்கள் ஸ்லாகோவை பின்பற்றுவதைப் பற்றி உங்கள் துணைக்குச் சொல்ல வேண்டியதில்லை. ‘தவிர்ப்பது’ என்கிற டெக்னிக்கில் இந்த ஸ்லாகோ உச்சரிப்பும் ஒரு முக்கியமான விஷயம்.
அடுத்து எந்த விஷயத்தையும் உங்கள் பார்வையிலிருந்து பார்க்காமல், துணையின் நிலையில் இருந்து அணுகக் கற்றுக் கொள்ளுங்கள். பிரச்னை வரும் போது, ஒவ்வொரு முறையும் உங்களுக்குள் ஒரு மந்திரம் சொல்லிக் கொள்ளுங்கள். இந்தத் தனிப்பட்ட பிரச்னை, அது குறித்த சண்டையைவிட, எனக்கு, என் துணையுடனான உறவுதான் முக்கியம் என்பதே அந்த மந்திரம்.
ஒரு பயிற்சி!
* 2 வாரங்களுக்கு உங்கள் துணை என்ன சொன்னாலும், எப்படி நடந்து கொண்டாலும் அதைப் பற்றி நெகட்டிவாக பேசுவதில்லை, விமர்சிப்பதில்லை, கட்டளையிடுவதில்லை என உறுதிமொழி எடுத்து, பின்பற்றுங்கள்.
* தினம் காலையில் எழுந்ததும் ஸ்லாகோ மந்திரத்தைப் பின்பற்ற முடியுமா என 2 நிமிடங்கள் யோசியுங்கள். மெல்ல மெல்ல சின்னச் சின்ன விஷயங்களுக்கு அதைப் பின்பற்றிப் பழகுங்கள்.
* மார்ஷியல் ஆர்ட்ஸ் டெக்னிக் என்கிற ஒன்றும் உங்களுக்கு உதவும். மார்ஷியல் ஆர்ட்ஸ் என்றால் தற்காப்புக் கலை. அந்தக் கலையில் எதிராளி உங்களைத் தாக்க கை ஓங்கும் போது, எதிர்த்து அவரை அடிப்பதற்குப் பதில், அந்தக் கையை அப்படியே உங்கள் பக்கம் இழுத்துவிடுவதுதான் இதில் அடிப்படை. அதாவது, உங்கள் துணை குறை சொல்கிற தொனியில் எதையோ ஆரம்பிக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள்... ‘நீ என்னை மதிக்கிறதே இல்லை... என்னைப் புரிஞ்சுக்கிறதே இல்லை...’ என அவர் பேசத் தொடங்கும் போது, மேற்கொண்டு வார்த்தைகளை வளர விடாமல், ‘அப்படியா நினைக்கிறீங்க? நான் உங்களை புரிஞ்சுக்கலைனா சொல்றீங்க...’ என உங்கள் பக்கம் பேச்சைத் திருப்பிக் கொண்டு போங்கள். பிரச்னையின் காரம் நீர்த்துப் போவதை உணர்வீர்கள்.
* என்ன செய்தாலும் உங்கள் துணை உங்களைக் குட்டாமல், மட்டம் தட்டாமல் இருக்க மாட்டார் என நினைக்கிறீர்களா? உதாரணத்துக்கு அமிர்தமே சமைத்து வைத்தாலும், அவரால் குறை சொல்லாமல் சாப்பிட முடியாதா? ‘எனக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது அவரோட பிரச்னை’ என்று நினைத்து அமைதியாக இருங்கள் அல்லது அவரது கமெண்டுகளுக்கு ‘நல்லது... நன்றி’ என்கிற வார்த்தைகளை மட்டும் பதிலாகக் கொடுத்துவிட்டு அமைதியாகி விடுங்கள்.
‘‘நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம்... உங்கள் பேச்சை, வார்த்தைகளை நீங்களே கவனிப்பது. என்ன பேசுகிறீர்கள் எனப் பாருங்கள். அதில் எத்தனை நெகட்டிவ் வார்த்தைகள், கட்டளைகள், விமர்சனங்கள் வந்து விழுகின்றன எனப் பார்த்து, அதை முதலில் நிறுத்துங்கள்!