ஒரே ஒரு விளம்பரம் தான்; கதவை தட்டிய ரோஜா பட வாய்ப்பு: ஏ.ஆர்,ரஹ்மான் - மணிரத்னம் இணைந்தது இப்படித்தான்

ஒரே ஒரு விளம்பரம் தான்; கதவை தட்டிய ரோஜா பட வாய்ப்பு: ஏ.ஆர்,ரஹ்மான் - மணிரத்னம் இணைந்தது இப்படித்தான்
ஒரு விளம்பரம் தான்; கதவை தட்டிய ரோஜா பட வாய்ப்பு: ஏ.ஆர்,ரஹ்மான்

ரோஜா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அந்த வாய்ப்பை பெற்று தந்தது ஒரு விளம்பர படம் தான் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

தமிழ் சினிமா மட்டுமல்லாமல், உலகளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் முன்பு, பல விளம்பர படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதில் அவர் இசையமைத்த பல விளம்பர டியூன்கள் இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஒரே படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இவர், மணிரத்னம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தார். அதே சமயம் பெரும்பாலான இசை பிரியர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படம் ரோஜா என்றே நினைக்கிறார்கள்.

ரோஜா படத்திற்கு முன்பே ரஹ்மான் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிவிட்டார். 1991-ம் ஆண்டு, வைரமுத்து எழுத்தில் அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான வணக்கம் வாத்தியாரே என்ற படத்தில் தான் ஏ.ஆர்.ரஹ்மான் முதன் முதலான இசையமைத்திருந்தார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு, விளம்பர படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் பல ஹிட் டியூன்களை கொடுத்துள்ளார். 1987-ம் ஆண்டு ஜப்பான் வாட்ச் நிறுவனத்திற்காக, இந்தியாவில் எடுக்கப்பட்ட விளம்பரத்திற்கு இசையமைத்துள்ளார்.

முதல் விளம்பரமே ஒரு ஆங்கில படத்திற்கு இருப்பது போன்று இசையமைத்து அப்போதைய இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர் தான் ஏ.ஆர்.ரஹ்மான். அடுத்து, ப்ரு காபி விளம்பரத்திற்கு இசையமைத்த ரஹ்மான், அப்போது முன்னணி நிறுவனமாக இருந்த எம்.ஆர்.எப் டயர் விளம்பரத்திற்கும் இசையமைத்து பட்டையை கிளப்பியுள்ளார். இந்த விளம்பரத்தில், தனது இசையின் மூலம் அசைவரையும் வியக்க வைத்தவர் தான் ரஹ்மான். இந்த விளம்பரத்தை மரியான் படத்த இயக்கிய பரத்பாலா இயக்கியிருந்தார்.