ஒரு 90ஸ்கிட்ஸ் கல்யாண வைபோகம்

ஒரு 90ஸ்கிட்ஸ் கல்யாண வைபோகம்
டும் டும் டும் 90s

ஒரு 90ஸ்கிட்ஸ் கல்யாண வைபோகமே....

---------------------------------------------------

32 வயதாகியும் இன்னமும் திருமணமாகாமல், அதே சமயத்தில் பெண் பார்க்கும் ஆர்வம் துளியும் குறையாத கலகலப்பான 90ஸ் கிட் ஒருவரை சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது. 

அவரது தாய் கிராமத்தில் இருக்க, இவர் 

நகரத்தில் தங்கி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். 

வீட்டிற்கு தேவையான மிக்ஸி, கிரைண்டர் ஃபிரிட்ஜ், டிவி உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைத்திருக்கிறார். youtube ஐ பார்த்து சமையலும் செய்து கொள்கிறார். இப்போதைக்கு அவருக்கு தேவை மனைவி மட்டுமே. 

இவ்ளோ நாளா பாக்குறீங்க எந்த பெண்ணும் செட் ஆகலையா?? தெரியாமல் இந்த கேள்வியை கேட்டு விட்டேன். அவரது அனுபவங்களை சொல்ல தொடங்கினார். அவரது அனுமதியுடன் பகிர்கிறேன்.

கல்லூரிக்கு ஒழுங்காக செல்வது, மாங்கு மாங்கு என்று படிப்பது என்று மிக நல்ல பிள்ளையாக கல்லூரியில் படிப்பதில் மட்டுமே கவனம் கொண்டு சின்சியராக இருந்திருக்கிறார். ஆனால் அவரது தம்பி நான்காம் ஆண்டு கல்லூரி படிக்கும்போது தன்னுடன் படித்த பெண்ணை காதலித்து, வீட்டில் சொல்லி பலதரப்பட்ட தடைகளுக்குப் பிறகு திருமணம் முடித்திருக்கிறார். இப்போது அவருக்கு இரண்டு பிள்ளைகள். நம்ம ஆளு பெரியப்பா ஆயிட்டாரு. அதுவும் "பேச்சுலர் பெரியப்பா". 

ஊருக்கு போகும்போதெல்லாம் அந்த பிள்ளைகளுக்கு டையபர் மாத்தி ஸ்னாக்ஸ் வாங்கி தந்து பிள்ளை வளர்ப்பிலும் மாஸ்டராகிவிட்டார். 

அடுத்ததாக தரகர் முதல் மேட்ரிமோனி வரை தன்னுடைய சொந்த முயற்சியில் தம்பியின் திருமணத்திற்கு பிறகு தனக்கு தானே பெண் பார்க்க தொடங்கி இருக்கிறார். காதலித்தது போக மீதி இருக்கும் 2 கே பெண்களின் எதிர்பார்ப்புகளை பார்த்து, முதலில் மிரண்டு போனாலும் பின்பு டைட் டி-ஷர்ட், ரெகுலர் ஜிம், லுங்கியை மறந்து பெர்முடாஸ் என அப்டேட் ஆகி இருக்கிறார். 

விக்கிரமாதித்தன் வேதாளத்தை தேடி செல்வதைப் போல, இவரது வேலை ஒரு பெண்ணின் அப்பாவை கவர்ந்து விட்டதாம். நல்லாவும் இருக்காரு, ஓரளவுக்கு சம்பாதிக்கிறாரு - சில பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு எங்கேஜ்மென்ட் வரை சென்றிருக்கிறது. 

எங்கிருந்தோ வந்த காதல் சிறகுகள் நம் தலைவருக்கு றெக்கைகளாக உருமாற

மோதிரம், செயின், புடவை என தயாராகி இருக்கிறார். குறைந்தபட்சம் நிச்சயத்திற்கு பின்பு தான் பெண்ணிடம் பேச வேண்டும் என கொள்கையை வேறு தீவிரமாக கடைப்பிடித்து நல்லபடியாக அதுவும் நடந்து முடிந்து விட்டது. 

அடுத்த நாள் காலை பெண்ணின் அலைபேசியில் இருந்து அழைப்பு வர, வெட்கமும் குதூகலமும் முகத்தில் தோன்ற, இடம் வாங்கி, வீடு கட்டி, பிள்ளைகளை எந்த பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது வரை இன்றே பேசிவிடலாம் என்ற முடிவுடன் ஹலோ என்றிருக்கிறார்.

மறுமுனையில் இருந்த பெண் நேரத்தை வீணாக்காமல், எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க?? என ஆரம்பித்து தான் வேறு ஒருவரை தீவிரமாக காதலித்து வருவதாகவும், அவரை மறக்க முடியாதெனவும், நீங்களே திருமணத்தை நிறுத்தி விடுங்கள் என்றும் குண்டை தூக்கி போட்டிருக்கிறார். நிச்சயத்திற்கு முன்பு நீங்கள் சொல்லியிருக்கலாம் அல்லவா?? அப்பாவியாக கேட்டிருக்கிறார் நண்பர். 

அதற்கு அந்த பெண் "அப்போதெல்லாம் என்னிடம் மொபைலே இல்ல, கூடவே ஆள் இருந்தாங்க, இப்போ உங்க கூட பேசறதுக்காக மட்டும்தான் அனுமதித்து இருக்காங்க" என்றார்.

அடுத்த நாளே கிளம்பி பெண் வீட்டிற்கு சென்று தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என லூசுத்தனமாக சொல்லி, 

எல்லாம் தெரிந்த பெண் வீட்டார் இவரது சட்டையைப் பிடிக்க, வேறு வழியின்றி அந்தப் பெண் பேசுகையில் புத்திசாலித்தனமாக ரெக்கார்ட் செய்ததை 

அவர்கள் முன்பு போட்டுக்காட்ட, அவர்கள் 

இந்த தியாகியை விடுவித்து , அவர்களுடைய இரண்டாவது பெண்ணை திருமணம் செய்து வைக்கலாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். 

ஆனால் இந்த முறை அந்தப் பெண் டக்குனு சுதாரித்து " நான் ஒருத்தர லவ் பண்றேன் பா" என அப்பாவிடமே சொல்லிவிட்டிருக்கிறது. 

போட்ட மோதிரம் புடவை மற்றும் செயினை கேட்க மனம் இல்லாமல், நிச்சயதார்த்தத்தில் தன்னோடு இணையாக நின்ற காரணத்திற்காக அந்த பெண்ணிற்கே விட்டு தந்து விட்டு வந்திருக்கிறார். 

இந்த அனுபவத்திற்கு பிறகு எங்கு பெண் பார்க்க சென்றாலும் அல்லது பெண் வீட்டார் இவரைப் பற்றி ஊரில் விசாரிக்க வந்தாலும் இந்த பழைய கதையை சொல்லி ஏதாவது ஒரு வகையில் திருமணம் தள்ளிக் கொண்டே போகிறதாம். 

நீண்ட காலமாக தொடரும் இந்த தேடுதல் வேட்டையில், பத்து நாளுக்கு முன்பு ஒரு ட்விஸ்ட் நடந்திருக்கிறது. மூன்று வருடத்திற்கு முன்பு திருமணம் வேண்டாம் என நிச்சயத்தோடு சென்ற மணப்பெண்ணுக்கு தன் காதலனோடு திருமணம் நடந்திருக்கிறது. 

இது எப்படி உனக்கு தெரியும்?? அந்த பொண்ணோட வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்து தெரிந்து கொண்டேன், நல்லா இருக்கட்டும் சார் என வாழ்த்தினார். 

ஊர்ல ஆயிரம் சொல்லட்டும் சார், எனக்குன்னு ஒரு பொண்ணு அமைஞ்சா, 

என்னால நிச்சயதார்த்தம் நிக்கல அப்படின்னு ப்ரூப் காட்ட அந்த ஆடியோவை அவளுக்கு கண்டிப்பா நான் போட்டு காட்டுவேன். அப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கும் என 

ஆணித்தரமாக சொன்னார். 

இத்தனைக்கு பிறகும் அவர் அதிகாலையில் எழுந்து ஜிம் போவது நிற்கவில்லை. ஆர்வமாக பெண் பார்ப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரே பாட்டில் சரத்குமார் போல ஒரு தேவயானி கிடைத்து விரைவில் நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்க என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு வந்தேன்.

90ஸ் கிட்ஸை போல நல்ல மனம் படைத்தவர்கள் யாருமில்லை. 

இனி இருக்கப் போவதுமில்லை.

அந்த மனசு கடவுள் மனசு.....