ஒத்த ரூபாய் காசு

ஒத்த ரூபாய் காசு
ஒத்த ரூபா காசு

அவர் தன்னோட கடைசி நேரத்துல இப்பவோ அப்பவோன்னு சொல்லமுடியாதபடி தத்தளிப்புல இருந்தாரு , சாப்பாடு சாப்புடுறது நின்னு ஒரு வாரமாச்சு, தண்ணி ஆகாரமா பால் ஜூஸ் ந்னு ரெண்டு மூணுநாளு போச்சு அதுக்கப்புறம் தண்ணி ஆகாரம்தான் எறங்குச்சு, "அது அவரோட இறுதி மணி நேரங்கள்"னு வைத்தியர் சொல்லிட்டாரு ஆனா பேச்சு மாத்திரம் நிக்கல மெதுவான கொரல்ல திக்கித்தெணறிப் பேசிக் கிட்டு இருந்தாரு. 

இதுல தன்னோடமுந்தில காசு முடிஞ்சி வைச்சிருந்தாரு. அத யாருக்கும் தரமாட்டாரு இவரோட பேத்தி அதான் ரெண்டாவது மகனோட மகளுக்கு மாத்திரம் அவுத்து "ஒரு ரூவா எடுத்துக்க"ச் சொல்லுவாரு எது எக்கேடு கெட்டாலும் அது அடிக்கடிநடக்கும் கிட்டத் தட்ட அவரோட மகனுக ரெண்டு மகளுக அவுகளோட புள்ளைக பேரன் பேத்திக எல்லாருக்கும் வரச்சொல்லித் தாக்கல் சொல்லியாச்சு, 

அவரோட சம்சாரம் ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே இவரைத்தனியாத் தவிக்க விட்டுட்டு பூவும் பொட்டுமாப் போய் சேந்துட்டா மகராசி இவரு அதுக்கப்புறம் நாராக் கெடந்து பொழப்பு நாறிபோச்சு.

போனமாசம் வரைக்கும் அவரோட நாளாவது மகன் வீட்டுலதான் கெடந்தாரு, அவனோட சம்சாரம் பண்ணுன கூத்துலதான் அவரோட ரெண்டாவது மகன் அவரைத்தூக்கியாந்து தன்னோட வீட்டுல வைச்சிப் பாத்தான், அந்த மகனுக்கும் இந்த மகனுக்கும் ஆகாது, அதுனால சண்டபோட்டுத் தூக்கியார வேண்டியதாப் போச்சு. 

வரும்போது அவர்கிட்ட கிட்டத்தட்ட 500 ரூவாக்கி ஒரு ரூவாயாயும் 500 ரூவா நோட்டாவும் மாத்திவைச்சிருந்தாரு.” எதுனாச்சும் செலவுன்னா இதுல இருந்து எடுத்துக்க”ன்னு மருமகக்கிட்ட சொல்வாரு. ஆனா அவ ”இருக்கட்டும் யா பாத்துக்கிடலாம்”னு சொல்லிடுவா,

ரெண்டாவது மகன் ஓரளவு வசதியோட தான் இருந்தான் இவன மாதிரி இல்ல. இவனுக்குப் புள்ள குட்டிக அதிகம் அதுனால வாய்க்கும் கைக்குமா பொழப்பு அதுல இவர வைச்சிப் பராமரிக்க முடியுமான்னு இவனோட சம்சாரம் கேட்டப்ப ”கஞ்சியோ கூழோ ஒரு வாய் சீவன் நம்ம குடிக்கிறதக் குடிச்சிட்டு இருக்கட்டும்”

”அங்க இவர் படும் பாடு சகிக்கல அதான் தூக்கியாந்துட்டேன்” . நு சொன்னான் ரெண்டாவது மகன்

படுக்கை யிலயே கெடக்காரு தூக்கவைக்க ஆளில்ல, அதுனால முதுகெல்லாம் புண்ணாப் போச்சு ”என்னா இப்புடிப் போட்டு வைச்சிருக் கீங்க ளே”ன்னு கேட்டா 

“எங்கனால அம்புட்டுத்தான் முடியும் ரொம்பக் காசலையா இருந்தா தூக்கிட்டுப்போய் பாக்கவேண்டியது தான அவரு என்னய மாத்திரமா பெத்தாரு நாலு மகன் ரெண்டு பொம்பளைகளைப் பெத்தாரில்ல. நாங்களே பாக்கனும் நு என்ன தலைஎழுத்து”

ன்னு ஒரே சத்தம் போட்டா அவன் சம்சாரம் அதுதான் தூக்கியாந்துட்டேன்னு சொன்னான் இவன்

மூணு வருசத்துக்கு முன்னாடி சொத்துப் பிரிக்கையில இவர் பொண்ணுகளுக்கு நகையும் பையன்கள் மூணுபேருக்கு மெயின் ரோட்டுல எடமும் குடுத்தாரு, அது என்னா கோவமோ இந்த ரெண்டாவது மகன் மேல அவனுக்கு அங்க எடம் குடுக்கல , பூர்வீக வீட்டுல அஞ்சு பங்கு அதுல ரெண்டு பங்கு மாத்திரம் இவனுக்கு எழுதிக் குடுத்தாரு “ எனக்கு இது வேணாம்மெயின்ல எடம் குடுங்க”ன்னு கேட்டதைக் காதில வாங்கிக்கவே இல்ல.

 அதுக்கு அவர் இவன்கிட்ட சொன்னாரு ”பாவம் அவனுகளுக்குச் சரியான பொழப்பு இல்ல நீ கவர்மெண்ட் வேலையில இருக்குற அவங்களுக்கு விட்டுக்குடு”ன்னு சொல்லிட்டாரு

இம்புட்டுக்கும் அவங்க காசு பணத்தோட நல்ல நெலமையிலதான் இருந்தாங்க இவன் தான் கடனோட மூச்சு விடமுடியாமத் திணறிக்கிட்டு இருந்தான்,

 ”அவர் அப்படிச் செஞ்சதுக்கு ஒரு ஒருஉள் நோக்கம் இருக்கு”ன்னு இவன் சம்சாரம் சொல்லிச்சி, அது என்னான்னா அந்த மூணுபேர் சம்சாரங்களும் இவரோட சொந்தப் பேத்திக, இவ மாத்திரம் தான் சொந்தப்பேத்தி கெடையாது அப்புடியும் ஒன்னும் தூரமில்ல அவரோட அண்ணனோட பேத்தி அதான் ஓரவஞ்சகம்”னு குத்தம் சொன்னா

அதோட இல்லாம தனக்கும் தன்னோட சம்சாரத்துக்கும் கடைசிக்காலத்துக்கும் ஈமக்கிரியைகளுக்கும் ஒரு தொகை தனியா பிரிச்சி அதுல பாதிய மூணாவது மகன்கிட்டக் குடுத்து சம்சாரத்தைப் பாத்துக்கவும், இன்னொரு பாதிய நாளாவது மகன்கிட்டக் கொடுத்து தன்னப்பாத்துக்கவும் ஏற்பாடு செஞ்சிருந்தாரு

இதுல அவரோட சம்சாரம் மகராசி மூணாவது மகன் நல்ல படியா முடிச்சிவைச்சான். இவர் பாடுதான் திண்டாட்டமாப்போச்சு, ரெண்டாவது மகன் கடனாளி அவன் கிட்ட இவர் சொன்னார் 

“நீ போய் என் பணம் அவன் கிட்ட இருக்கு போய் வாங்கிட்டு வந்து எனக்குச் செலவுபண்ணித் தூக்கிப்போடு”ன்னு சொன்னார், அதுக்கு இவன் சொல்லிட்டான் 

“அவங்களுக்கே தெரியனும் நானாப் போய் கேக்க மாட்டேன்”னு சொல்லிட்டான்

அப்ப இவரோட அண்ணன் மக அதான் ரெண்டாவது மகனுக்குப் பொண்ணு கொடுத்தது வந்து விசயத்தைக் கேள்விப்பட்டு தன் மகளோட கஸ்ட்டத்தைப் பாத்துட்டு நாளாவது மகன்கிட்ட போய் பணத்தக் கேட்டா, அதுக்கு அவங்க ”அதெல்லாம் செலவாயிப் போச்சு ஒன்னும் பாக்கியில்ல”ன்னு சொல்லவும் வருத்தமாப்போச்சு,

இது காத்துவாக்கில இவர் காதுல விழ இவர் அவனைத்திட்ட ஆரம்பிச் சிட்டாரு. ”வெளங்காதபய குடுத்த காச எனக்குச்செலவு பண்ணாம தீந்துபோச்சுன்னு சொல்றானே வெளங்குவானா”ன்னு திணறி திணறி கண்ணீரோட சொல்லிக்கிட்டு இருந்தாரு

அப்ப ரெண்டாவது மகனோட சம்சாரம் சொல்லிச்சி” போனா போகட்டும் அய்யா செலவோட செலவா கடனோட கடனாப் பாத்துக்கிறோம் அது ஒன்னும் எங்களுக்குப் புதிசில்ல”னு சொல்லிச்சி,

அப்ப அவர் ”நான் தப்புப் பண்ணிட்டேன், சொத்துப் பிரிக்கையில நான் கொஞ்சம் உன் விசயத்துல சரியா நடந்துக்குல அதுக்குக் காரணம் என்னோட பேத்திப் பாசம்.ஆனா அதுக்குச் சரியான பாடம் சொல்லிட்டான் என் மகன் நீ மகராசி ஒனக்கு நான் சரியாச் செய்யாட்டியும் என்னக் கடைசி நேரத்துல மொகம் சுழிக்காம வைச்சிப் பாக்குற ஒன்னக் கையெடுத்துக் கும்புடனும் போல இருக்கு அதே நேரத்துல அவன் இதுக்கான பலன அனுபவிப்பான்”னுனு சொன்னார்

அப்ப ரெண்டாவது மகனோட மாமியார் சொன்னாங்க” பாவம் அவனும் இவரோட சாபத்துக்கு ஆளாக வேணாம் நான் ஒரு யோசனை சொல்லுறேன் அதுமாதிரி செய்வோம்”னு சொல்லிட்டு வெளியபோய் ஒரு மஞ்சப்பை நெறையா காசுகளை வாங்கி அதுக்குள்ள போட்டுக்கட்டி எடுத்துட்டு வந்தாங்க

அந்தப்பைய இவர் கிட்டக் காமிச்சி சித்தப்பா( இது இவர் அண்ணன் மகள்) இப்பப் போய் உங்க மகன்கிட்டக் கேட்டேன் அவன் எங்க எங்கயோ கேட்டு கடன் வாங்கி ஒங்க பணத்த இந்தப்பையில போட்டுக் குடுத்துட்டான் , அதுனால இனிமே அவனைத்திட்டாதீங்க, பாவம் அவனும் உங்க மகன் தான”ன்னு சொன்னாங்க

அதைக்கேட்டதும் அவருக்குக் கோவமே வந்துருச்சு, 

“யாரு காதுலமா பூச்சுத்துற அவனாவது குடுக்குறதாவது. இது அவன் குடுத்ததில்லன்னு எனக்குத்தெரியும், என்ன ஏமாத்தமுடியாது குடுக்கனும் நு நெனைக்கிறவன் கேக்காமலே குடுப்பான் முடியாதுன்னு சொல்றவன் எப்புடிக்கேட்டாலும் யார் கேட்டாலும் தரமாட்டான் என் மகனைப்பத்தி எனக்குத் தெரியாதா போம்மா”னு சொல்லும்போது அவர் கண்ணு கலங்குச்சு

இப்ப ரெண்டாவது மகனோட சம்சாரத்தப் பக்கத்துல வரச்சொன்னாரு வந்தவுடன்

“ ஏம்மா என் தாயப்போன்றவளே உள்ளாற போய் துண்ணூரு ( விபூதி)எடுத்துட்டு வா”ன்னு சொன்னாரு 

அவ உள்ளாறபோய் சாமி கும்புட்டுட்டு துண்ணூ ருத் தட்டக் கொண்டாந்தா.அதைக் கையில வாங்கிக்கிட்டுச் சொன்னாரு 

“ஒனக்கு நான் சொத்து எதுவும் பெருசாக்குடுக்கல உன் பிள்ளைகளை அதான் என் பேரன் பேத்திகளை வரச்சொல்லுன்னு சொன்னாரு , எல்லாரும் வந்தவுடன் ஒவ்வொருத்தராக் கூப்புட்டு நெத்தில துண்ணுரு வைச்சி விட்டாரு கடைசில ரெண்டாவது மருமகளக் கூப்புட்டு நெத்தில துண்ணூரப்பூசிட்டு கண்கலங்கச் சொன்னாரு

”ஒனக்கு சொத்துபத்து பெருசாக்குடுக்கல ஆனா யார்ருக்கும் குடுக்காத மனாசாற ஆசீர்வாதத்தக் குடுக்குறேன் இப்ப நீ செரமப் பட்டாலும் உன்னோட பிள்ளைக பேரன் பேத்திக நல்லா வருவாங்க நல்லா கடைசி வரை ஒன்ன வைச்சிப்பாத்துப்பாங்க, இது நடக்கும் அதுதான் நான் உனக்குக் குடுக்குற பெரிய சொத்து....இந்தா ஒரு ரூவா இதைப் பத்திரமா வைச்சிக்க இன்னொரு ஒத்த ரூவா வேட்டில முடிஞ்சி வைச்சிருக்கேன் அது என்னோட நெத்தில கடைசியா வைக்கிறதுக் கு””ன்னு சொல்லிட்டுகண்ண மூடுனாரு, அவர் கண்ணுல இருந்து கண்ணீர் வழிஞ்சது, அதுக்கப்புறம் அதுவும் நின்னு போச்சு,

அப்ப எல்லாரும் பெருங்கொரல் எடுத்து அழுதாக ,அப்ப ரெண்டாவது மருமகளும் பிள்ளைகளும் கண்ணீர் விட்டு அழுதாக அவரோட மொகத்துல ஒரு நிம்மதி தெரிஞ்சது அது தன்னோட கடமைய முடிச்ச முடிவில்லா நிம்மதி. இது எதுவுமே தெரியாம ரெண்டாவது மகனோட மக அதான் பேத்தி வழக்கம் போல அய்யா ஒரு ரூவா குடுங்கன்னு கேட்டுக்கிட்டு இருந்துச்சு. அவர்கிட்ட இருந்த கடைசி ஒரு ரூவா அவரோட நெத்தில இருந்துச்சு... அது அவரோட காசு, அது அவர் தனியா வைச்சிருந்த ஒத்த ரூவாக் காசு...