பாம்பு கடித்த முதல் நிமிடத்தில் என்ன செய்ய வேண்டும்...? ஆய்வாளர்கள் கூறுவதை கேளுங்கள்!

பாம்புக்கு அஞ்சாதவர்களே இல்லை எனக் கூறலாம். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழியை கொண்டே இதை நாம் உணர இயலும். இவ்வாறு மனிதர்களை அச்சுறுத்தும் அனைத்து பாம்புகளும் நஞ்சுடையவைகளா எனக் கேட்டால், இல்லை என்றே கூறலாம்
உலகில் காணப்படும் பாம்பு வகைகளுள் பெரும்பாலானவை நஞ்சுத்தன்மை இன்றியே காணப்படுகின்றன. கொம்பேறி மூக்கன் என்னும் பாம்பு அதிக விஷத்தன்மை உடையது என மக்கள் எண்ணி உள்ளனர். ஆனால் உண்மையில் இந்த பாம்பு விஷத்தன்மை அற்றது என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை
பாம்புகளை பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லாததே இதற்கான முக்கிய காரணமாகும். மக்களிடையே பாம்புகள் குறித்த அச்சத்தை போக்கும் வகையில் தமிழக வனத்துறை சார்பில் ”தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் பாம்புகள்” என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது
இதில் நஞ்சுத்தன்மை உள்ள பாம்புகள், நஞ்சற்ற பாம்புகள், பாம்புகளின் வகைகள், பாம்புகளின் குணாதிசயங்கள், பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பன குறித்து பல தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன் மாரியப்பன், பாம்பின் நஞ்சு குறித்து ஆய்வு செய்து வரும் பாம்புக்கடி விஞ்ஞானி முனைவர் மனோஜ் இணைந்து உருவாக்கியுள்ள இந்த புத்தகம் பாம்பு குறித்து மக்களிடையே காணப்படும் தவறான புரிதல்களை தெளிவுப்படுத்துகின்றன.
இந்த புத்தகத்தில் 11 பாம்பு குடும்பங்களில் 8 பாம்பு குடும்பங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு பாம்பு கடித்தால் என்ன செய்ய் வேண்டும் என்பது குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது
பெரும்பாலும் பாம்பு கடித்த உடன் அனைவரும் முதலில் அச்சப்படுகின்றனர். ஆனால் பாம்பு கடித்த முதல் நிமிடத்திலேயே, பயப்படாமல் அருகில் யாரேனும் உதவிக்கு உள்ளனரா என்பதை கண்டறிய வேண்டும். உடனடியாக மருத்துவமனையில் இருந்து உதவி பெற்றுக்கொண்டோ அல்லது உடனடியாகவோ மருத்துவமனை செல்ல வேண்டும் என இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
பாம்புகளை குறித்து முழுமையாக நீங்களும் தெரிந்துகொள்ளா விரும்பினால் உலக பாம்புகள் தினத்தில் வெளியிடப்பட்டுள்ள “தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் பாம்புகள்” புத்தகத்தை நீங்களும் பெற்று தெரிந்துகொள்ளுங்கள்.