கால்களை இழந்தாலும், தன்னம்பிக்கை தைரியத்துடன் வாழும் சதானந்தன் மாஸ்டர்

கால்களை இழந்தாலும், தன்னம்பிக்கை தைரியத்துடன் வாழும் சதானந்தன் மாஸ்டர்
மாஸ்டர் கண்ணூரில், மட்டனூர் கிராமத்தில் பாரம்பரிய மார்க்சிஸ்ட் குடும்பத்தில் பிறந்தவர்

ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ள சதானந்தன் மாஸ்டர் கண்ணூரில், மட்டனூர் கிராமத்தில் பாரம்பரிய மார்க்சிஸ்ட் குடும்பத்தில் பிறந்தவர். உள்ளூரில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்து, வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் பி.எட். படித்தார். சொந்த மண்ணிலேயே ஆசிரியர் பணி மேற்கொள்ள வேண்டும் என்ற உணர்வுடன் கண்ணூர் மாவட்டத்திற்கு திரும்பிய சதானந்தன், அங்கேயே பணியில் சேர்ந்தார்.

கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உச்சத்தில் இருந்த காலம் அது. அக்கட்சியில் இருந்த சதானந்தன், அதன் சித்தாந்த கொள்கை பிடிக்காமல் வெளியேறினார். அங்கு, போட்டியாக இருந்த ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் 1984ல் சேர்ந்து, அதன் கிளையை தன் சொந்த கிராமத்தில் சதானந்தன் அமைத்தார்.

அடுத்த, 10 ஆண்டுகள், அந்த அமைப்பில் அவர் காட்டிய முழு ஈடுபாடு, மார்க்சிஸ்ட் கட்சியினரை அதிர செய்தது. இதன் விளைவாக, 1994ல், குடியரசு தினத்துக்கு முந்தைய நாள், பஸ்ஸில் வீடு திரும்பிய சதானந்தனை, அக்கட்சியினர் வழிமறித்து, அவரின் இரண்டு கால்களையும் துடிதுடிக்க வெட்டினர்

ஆனாலும் சதானந்தன் துவண்டுவிடவில்லை. செயற்கைக்கால்களுடன் நடமாடினார். அதன் பின் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிற்காக கூடுதல் உத்வேகத்துடன் பணியாற்றினார்.

தன் 61வது வயதில் ஆசிரியராகவே வாழ்ந்து வரும் சதானந்தனின் உழைப்பை பார்த்த பா.ஜ., கண்ணூரின் கூத்துபரம்பா தொகுதியில், அவரை 2016 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட செய்தது. இரு தேர்தல்களிலும் சதானந்தன் தோல்வியை தழுவினார்.

இந்த தோல்வியும் அவரை பாதிக்கவில்லை. தன் சமூகப் பணியை மேலும் சிறப்பாக தொடர்ந்தார். பா.ஜ.,வின் ராஜ்ய சபா எம்.பி.,யாக சதானந்தன் நியமிக்கப்பட்டது, அவரின் தைரியம் மற்றும் தியாகத்துக்கு கிடைத்த பரிசாகவே பார்க்கப்படுகிறது

-நமது சிறப்பு நிருபர்-