ராமநாதபுரத்தில் வலையில் சிக்கிய பொக்கிஷம்.. குஷியில் துள்ளிய கண்ணன்.. ஒரே நாளில் லட்சக்கணக்கில் பணம்

ராமநாதபுரம்: சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த பைந்தமிழன் என்ற மீனவர் கடந்த வாரம் பலருக்கும் வியப்பை தந்து விட்ட நிலையில், இப்போது, ராமநாதபுரம் கண்ணன், ஒட்டுமொத்த மாவட்டத்துக்குமே ஆச்சரியத்தை தந்துவிட்டார்.. வழக்கமாக மீன்பிடித்து கொண்டிருந்தபோதுதான், இந்த அதிசயம் நடந்துள்ளது.. இந்த சம்பவம் இணையத்திலும் பேசுபொருளாகி வருகிறது.. அப்படி என்ன நடந்தது?
மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகும் நிலையில், மீன்களின் வரத்துக்கள் தமிழக கடலோரங்களில் அதிகரித்துள்ளன.. ஆழ்கடலுக்கு சென்று அங்கேயே நாட்கணக்கில் தங்கியிருந்து ஏராளமான மீன்களை, மீனவர்கள் அள்ளி கொண்டு கரைக்கு வருகின்றனர்.
விதவிதமான மீன்கள்
அந்தவகையில், கடந்த சனிக்கிழமையன்றுகூட, சென்னை காசிமேட்டில் 80க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைக்கு வந்து சேர்ந்திருந்தன.. அதில், ஏராளமான தேங்காய் பாறை, மஞ்சள் பாறை, கடல் விரால் போன்ற மீன் வகைகள் அதிகமாக இருந்தன.
மீன்களின் வகைகள் அதிகமாகி கொண்டு வருவதால், மீன் பிரியர்களும், மீன் வியாபாரிகளும், வகை வகையான மீன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. சில மீன்களின் குறைவாகவும், சில மீன்களின் விலை அதிகமாகவும் இருந்தாலும், மீன்கள் கணிசமான விற்பனையை பெறுகின்றன.. இதனால், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையே 1:00 மணிக்கே காசிமேட்டில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை காண முடிந்தது.
காசிமேடு பைந்தமிழன்
அப்போது, காசிமேடு பகுதியைச் சேர்ந்த பைந்தமிழன் என்ற மீனவர் பலருக்கும் வியப்பை தந்து விட்டார்.. ஏனென்றால், கோவளம் பகுதியில் ஆழ்கடலில்தான் பைந்தமிழன் மீன்பிடித்து கொண்டிருந்தாராம்.. அப்போது, 150 கிலோ பால் சுறா மீன் திடீரென அவருடைய வலையில் சிக்கி கொண்டுவிட்டது
உடனே இந்த மீன் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்துவிட்டார்.. இந்த மீனை பார்க்க ஏராளமான மக்கள் திரண்டு வந்து விட்டனர்.. 150 கிலோ மீனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி சென்றனர்.. இந்த மீன், கிலோ 300 ரூபாய் என, 45,000 ரூபாய்க்கு விற்பனையாகும் என்கிறார்கள் மீனவர்கள்.
பெரிய பாறை மீன்
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையிலும் ஒரு ஆச்சரியம் நடந்துள்ளது.. அங்குள்ள தொண்டி- புதுக்குடி என்ற மீனவ கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர், தன்னுடைய நாட்டுப்படகில் நேற்று வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றிருக்கிறார்.. அப்போது எதிர்பாராதவிதமாக கண்ணனின் வலையில், சுமார் 5 டன் எடையுள்ள பெரிய பாறை மீன்கள் கூட்டமாக சிக்கிக் கொண்டுவிட்டதாம்.
இதை பார்த்ததுமே ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தார் மீனவர் கண்ணன்.. ஆனால், 5 டன் எடையுள்ள மீன்கள் என்பதால், அவ்வளவு மீன்களையும் கண்ணனால் இழுத்து கொண்டு வர முடியவில்லை.. இதனால், வலையில் சிக்கிய சுமார் 5 டன் எடையுள்ள மீன்களை பிடிப்பதற்காக அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த, சக மீனவர்களை அழைத்திருக்கிறார்.
அவர்களின் உதவியுடன் கிட்டத்தட்ட 3 நாட்டுப்படகுகளை பயன்படுத்தியே, வலையில் சிக்கியிருந்த அனைத்து மீன்களையும் பிடித்து கரைக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் கண்ணன்.
ஒரே ஆச்சரியம் - பரபரப்பு
இந்த 5 டன் எடை கொண்ட மிகப்பெரிய பாறை மீன்களின் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் இருக்கும் என்கிறார்கள்.. இதுபோன்ற மிகப்பெரிய அளவிலான பாறை மீன்கள், நாட்டுப்படகு மீனவர்களின் வலையில் கிடைப்பது மிக மிக அரிதான விஷயமாம். அதனால்தான், கண்ணன் உள்ளிட்ட மீனவர்கள், வலையில் மீன்களை பார்த்ததுமே மகிழ்ச்சியில் துள்ளியிருக்கிறார்கள்...
இதைக் கேள்விப்பட்ட சுற்றுவட்டார மக்களும், பாறை மீனை பார்க்க படையெடுத்து வருகிறார்களாம்.. கண்ணனின் வலையில், 5 டன் எடை கொண்ட பாறை மீன் கிடைத்த சம்பவம்தான் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை நேற்று முதல் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.