சாக்கடையாக இருந்த சியன் நதியில் 100 ஆண்டுக்கு பின் நீச்சலடித்த மக்கள்; ரூ.1,405 கோடியில் துாய்மையானது

பாரிஸ் : நதிகளை நாம் பாதுகாத்தால், அது நம்மை காக்கும் என்பதை உணர்த்தும் வகையில், சாக்கடையாக மாறியிருந்த பிரான்சின் சியன் நதி துாய்மை படுத்தப்பட்டுள்ளது. வெறும், 1,405 கோடி ரூபாயில் இது சாத்தியமாகியுள்ளது. 100 ஆண்டுக்குப் பின், அதில் மக்கள் நீச்சலடித்து மகிழ்கின்றனர்.
குளிக்க தடை
ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிசில் உள்ளது புகழ்பெற்ற சியன் நதி. ஐரோப்பாவின் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த மழைநீர் வடிகாலாக இது இருந்தது. மொத்தம், 780 கி.மீ., துாரத்துக்கு பாயும் இது, பிரான்சின் உள்நாட்டு நீர் வழி போக்குவரத்தாகவும் இருந்தது.
வடகிழக்கு பிரான்சின் டிஜானில் இருந்து உருவாகும் இந்த நதி, நாட்டின் பல முக்கிய நகரங்கள் வழியாக பாய்ந்து, இங்கிலீஷ் கால்வாயில் கலக்கிறது. பாரிசின் புகழ்பெற்ற ஈபிள் டவர் உள்ளிட்டவை இதன் கரையோரத்தில் உள்ளன.
ஆனால், ஒரு காலகட்டத்தில் தொழிற்சாலைகள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் கலக்கப்பட்டு, நாட்டின் மிகப் பெரிய சாக்கடையாக மாறியது. இந்த நதியில் குளிப்பதற்கு, 1923ல் தடை விதிக்கப்பட்டது. அதன் பின், பல முயற்சிகள் மேற்கொண்டும், இந்த நதியை துாய்மைபடுத்த முடியவில்லை.
கடந்த, 1990களின் இறுதியில், இந்த நதியை துாய்மைபடுத்துவது ஒரு இயக்கமாக மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, தொழிற்சாலைகள், வீடுகளில் இருந்து கழிவுகள் கலக்கப்படுவது முதலில் தடுக்கப்பட்டது.
இவ்வாறு படிப்படியாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்தாண்டு பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. அதையொட்டி, இந்த நடவடிக்கைகள் மேலும் வேகமெடுத்தன.
ஒலிம்பிக் போட்டியின்போது, இந்த நதியில், படகு போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. தொடர்ந்து, நதியை மேலும் துாய்மைபடுத்தும் பணியுடன், அதன் கரையோரங்களை அழகுபடுத்தும் பணிகளும் நடந்தன.
மக்கள் மகிழ்ச்சி
இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், 100 ஆண்டுக்குப் பின், அந்த நதியில், பொதுமக்கள் நீச்சலடிக்க, கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டது.
இந்த துாய்மைபடுத்தும் பணிக்காக, பிரான்ஸ் அரசு, 1,405 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளது. அரசு நிர்வாகம் நினைத்தால், செய்து முடிக்க முடியும் என்பது, மக்கள் மகிழ்ச்சியுடன் நீச்சலடிப்பதில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.