ஈரோடு விவசாயிகளுக்கு வரும் வேளாண் அதிகாரி அழைப்பு.. அடுத்த நிமிடம் பறிபோகும் பணம்.. பின்னணி

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மைத்துறையில் பணியாற்றுவதாக கூறி ஒருவர் விவசாயிகளிடம் அறிமுகமாகி, விவசாயிகளுக்கு அரசு மானியம் பெற்றுத்தருவதாகவும், வேளாண்மை மற்றும் துறை சார்ந்த அனைத்து நலத்திட்டங்கள், சலுகைகள் பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்து வருவதாக ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்ச்செல்வி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயிளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த நலத்திட்ட உதவிகளை பெற யாருக்கும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை..எனினும் சிலர் அரசு அதிகாரிகளின் பெயரை சொல்லி பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது. உடனே அரசின் மானியம் பெற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபடுவது நடக்கிறது. ஈரோட்டில் அப்படி பலரிடமும் மோசடி நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்ச்செல்வி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மைத்துறையில் பணியாற்றுவதாக கூறி ஒருவர் விவசாயிகளிடம் அறிமுகமாகி, விவசாயிகளுக்கு அரசு மானியம் பெற்றுத்தருவதாகவும், வேளாண்மை மற்றும் துறை சார்ந்த அனைத்து நலத்திட்டங்கள், சலுகைகள் பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்து வருவதாக புகார்கள் வந்துள்ளன.
அந்த நபர் விவசாயிகளிடம் இருந்து அவரது சொந்த வங்கிக்கணக்கில் பணம் பெற்று உள்ளதும், அவர் விவசாயிகளை நேரடியாகவும், தொலைபேசி அழைப்பு மூலமாகவும் தொடர்பு கொண்டு விவசாயிகளிடம் பேசும்போது, அந்தந்த ஊர்களில் உள்ள முக்கிய நபர்களின் பெயரையும் பயன்படுத்தி பணம் வசூலித்துள்ளதாக தொலைபேசி உரையாடல்கள், குறுஞ்செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுபோன்ற மோசடி நபர்கள் குறித்து பொதுமக்கள், விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் எந்த ஒரு திட்டத்துக்கும் விவசாயிகள் பணம் செலுத்த வேண்டியதில்லை. எனவே விவசாயிகள் தனிப்பட்ட எந்த ஒரு அலுவலரின் வங்கிக்கணக்குக்கும் பணம் செலுத்த வேண்டியதில்லை. ரொக்கமாகவும் தொகை ஏதும் வழங்க வேண்டியதில்லை.
எனவே வேளாண்மை திட்டங்கள், மானியங்கள் குறித்த அனைத்து சந்தேகங்களையும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை அதிகாரிகள், வேளாண் சார்ந்த துறை அலுவலகங்களை நேரில் தொடர்பு கொண்டு பயன் அடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மோசடி நபர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் தொகை அல்லது வேறு வகையான ஆவணங்கள் ஏதும் கொடுத்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்" இவ்வாறு வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்ச்செல்வி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.