வேரோடு பிடுங்கி மறுநடவு': கோவையில் சாலைக்காக மரங்கள் அகற்றம் - உச்ச நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படுகிறதா?

கோவை மாவட்டத்தில் சாலை விரிவாக்கம், புதிய புறவழிச்சாலைகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டு வருவது குறித்து சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அந்த மரங்களுக்குப் பதிலாக, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மாற்று மரங்களை நடவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், அவினாசி– மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்படும் 1,819 மரங்களுக்குப் பதிலாக வேறிடங்களில் மரங்களை நட வேண்டுமென்று தேசிய பசுமை தீர்ப்பாயம், மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த மரங்களுக்கு ஈடாகவும், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மற்ற சாலைகளில் வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாகவும் வேறிடங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் நடப்பட்டு வருவதாக, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளனர்.
பசுமைப் பரப்பில் கோவை முதலிடம்
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய 6 நகரங்களில் பசுமை மற்றும் வாழ்க்கைச் சூழல் குறித்து, இந்திய தொழிற்கூட்டமைப்பின் கிளை அமைப்பான இந்திய பசுமை கட்டடக்குழு, சமீபத்தில் ஓர் ஆய்வை நடத்தியது. ஒரு நகரத்தின் பசுமைப்பரப்பு, செயல் திறன் மற்றும் வாழ்வாதாரம் போன்ற பல்வேறு கூறுகளை மதிப்பிடும் இந்த ஆய்வில் கோவை முதலிடம் பெற்றுள்ளதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி கூறுகிறது. ஒரு தனிநபருக்கான பசுமைப்பரப்பின் தேசிய சராசரி 24.6 சதுர மீட்டராக இருக்கும் நிலையில், கோவையில் அதுவே 46.6 சதுர மீட்டர் என்ற அளவில் இருப்பதாகச் சொல்கிறது அந்த ஆய்வு.