கொரோனா காலத்தை விட குறைவு: டிரம்ப் நடவடிக்கையால் இந்தியர்களுக்கான அமெரிக்க மாணவர் விசா 27% சரிவு

ஓபன் டோர்ஸ் 2024 தரவுகளின்படி, 2023-24 கல்வி ஆண்டில் இந்தியர்கள், சீன மாணவர்களை பின்னுக்குத் தள்ளி, நாட்டில் மிகப்பெரிய சர்வதேச மாணவர் குழுவாக உருவெடுத்தனர்.
அமெரிக்காவில் உயர்கல்வி கற்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு இந்த ஆண்டு விசா சீசன் மந்தமாக தொடங்கியுள்ளது. வழக்கமாக ஆகஸ்ட்/செப்டம்பர் மாதங்களில் தொடங்கும் கல்வி ஆண்டுக்கு தயாராகும் மாணவர்கள், மார்ச் முதல் ஜூலை வரையிலான மாதங்களில் விசா பெறுவதற்கு அதிக அளவில் விண்ணப்பிப்பார்கள். ஆனால், அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு மார்ச் முதல் மே வரையிலான காலகட்டத்தில் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட F-1 விசாக்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 27% குறைந்துள்ளது. குறிப்பாக, 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த மாதங்களில் மிக குறைந்த அளவை எட்டியுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் முதல் மே வரை இந்திய மாணவர்களுக்கு 9,906 F-1 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இது, சர்வதேச பயணங்கள், கோவிட்-19-க்குப் பிறகு மீண்டும் தொடங்கிய 2022-ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட 10,894 விசாக்களை விடவும் குறைவாகும். 2023-ஆம் ஆண்டில் இந்த மாதங்களில் 14,987 F-1 விசாக்களும், 2024-ஆம் ஆண்டில் 13,478 விசாக்களும் வழங்கப்பட்டன.
இந்த சரிவுக்கு டிரம்ப் நிர்வாகத்தின் புதிய கட்டுப்பாடுகள் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் அல்லது சட்ட அமலாக்கத்துறையுடனான தொடர்புகள் காரணமாக பல சர்வதேச மாணவர்களின் (இந்தியர்கள் உட்பட) விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக நடவடிக்கைகளை மிகவும் கடுமையான முறையில் சரிபார்க்க மே 27 முதல் ஜூன் 18 வரை புதிய விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
விசா ரத்து நடவடிக்கைகள் பல சட்ட வழக்குகளுக்கு வழிவகுத்துள்ளன. அதே சமயம், அமெரிக்க பல்கலைக்கழகங்கள் நிதி குறைப்பு மற்றும் சர்வதேச மாணவர் சேர்க்கையில் அதிகரித்து வரும் ஆய்வை எதிர்கொள்கின்றன.
மே மாதத்தில், பொலிடிகோ (Politico) செய்தி நிறுவனம், மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கான புதிய நேர்காணல்களை நிறுத்துமாறு அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தூதரப் பிரிவுகளுக்கு டிரம்ப் நிர்வாகம் அறிவுறுத்தியதாக தெரிவித்தது. சமூக ஊடக சரிபார்ப்பை வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டாயமாக்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறப்பட்டது. ஜூன் மாதத்திற்குள், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம், F, M, மற்றும் J வகை விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளை பொதுப்படையாக வைக்குமாறு அறிவுறுத்தியது. (F-1 விசா கல்விக்கும், M வகை தொழிற்கல்வி அல்லது கல்வி சாரா திட்டங்களுக்கும், J விசா பரிமாற்ற திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டின் மந்தமான தொடக்கமானது, 2024-ஆம் ஆண்டில் மாணவர் விசா வழங்கலில் ஏற்பட்ட ஒட்டுமொத்த சரிவை தொடர்கிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிட்ட செய்தியின்படி, கோவிட்-19-க்கு பிந்தைய ஆரம்ப ஏற்றத்திற்கு பிறகு, 2024-ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கான மாணவர் விசா ஒப்புதல்கள் கடுமையாக குறைந்தன. 2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 64,008 F-1 விசாக்கள் மட்டுமே இந்தியமாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இது 2023-ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட 1.03 லட்சம் விசாக்களையும், 2022-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 93,181 விசாக்களையும் விடக் குறைவு.