ஒரு பெண் தன் தாயை பற்றி எழுதியது

ஒரு பெண் தன் தாயை பற்றி எழுதியது
அம்மா........

ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது... ❤️

"ப்ளீஸ்...!"

என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா...

ஆனால் அம்மா அப்படி இல்லை...

இரும்பு மனுஷி...

ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை...

மண்டியிட வேண்டும்,

கெஞ்ச வேண்டும்,

மிஞ்ச வேண்டும்,

அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்...

எதுக்குமே மசிய மாட்டார்...!

கோபம் தலைக்கேறி அழுது புலம்புவதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்..?

கடைசியில்தான் தெரியும் நான் விரும்பியது 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும்...

இப்படி அம்மாவின் பல கண்டிப்புக்களும், திட்டுக்களும் என்னை மீட்கவே செய்தது பிரமிப்பின் நீளம்...!

வசவுகள் எல்லாமே எனக்கு தடுப்பு வேலிகளாகவே இருந்திருக்கிறது...

இறுதியில் தோற்று போனது ஒன்றுக்கும் உதவாத என் பிடிவாதமாகத்தான் இருந்திருக்கிறது...!

கிச்சனில் அம்மா வியர்க்க விறுவிறுக்க

எங்களுக்காக சுயமரியாதையை தொலைத்து நின்றிருந்த தருணங்கள்

ஏராளம்...

"துணி காயப்போடு,

பீரோவை அடுக்கி வை...

மதியானத்தில் தூங்காதே...

எப்ப பாரு என்ன டிவி?

புக் எடுத்து படி...

வீட்டு வேலை செய்,

கல்யாணம் பண்ணி போற இடத்துல என்ன நினைப்பாங்க,

சரியா வளர்க்கலேன்னு என்னை திட்ட மாட்டாங்களா"

என்று நை... நை...

புகைச்சல் காதில் விழும்போதெல்லாம் உச்சத்தின் எரிச்சலுக்கு என்னை இட்டு சென்றது...

இன்று

"சாம்பார் சூப்பர்,"

"வத்தக்குழம்பு சூப்பர்"

என்று அடுத்தவர் என்னை பாராட்டும்போதுதான் அந்த குடைச்சலின் பெருமை துளிர்த்து எட்டி எட்டி பார்த்தது...!

மெல்ல என் மரமண்டைக்கு விஷயம் ஏற ஆரம்பித்தது...

இதிலும் நான்தான் தோற்று போனேன்...

இருந்தாலும் இந்த அம்மாவுக்கு இவ்வளவு கல்நெஞ்சம் இருக்கக்கூடாது...

அப்போதுதான்

நூடுல்ஸ் வந்த புதிது...

அதன் மீது அப்படி ஒரு பிரியம் வந்துவிட்டது...

ஒருநாள் அதை வாங்கி சாப்பிட 5 ரூபாய் கேட்டால்கூட என் அம்மா கறார்தான்...

தர முடியாது என்ற ஒற்றை வார்த்தையை அழுத்தமாக சொல்லிவிட்டார்...

"உங்க சமையல் வெறுப்பா இருக்கும்மா, நூடுல்ஸ்தான் வேணும்''

என்று அழுதாலும் ஒரு பதிலும் அங்கு வரவே வராது...

5 ரூபாய் தராத அம்மா எல்லாம் ஒரு அம்மாவா..?

என்று நொந்து போய் அழுதடியே அன்று தூங்கிவிட்டேன்.

மறுநாள் காலை தூங்கி எழுந்தால்,

வீட்டுக்கு வந்த பாத்திர வியாபாரியுடன் அம்மா பேசி கொண்டிருந்தார்.

அந்த வியாபாரி கையிலும், சுற்றிலும் புதுபுது பாத்திரங்கள் கண்ணை கூசின.

ஆமா...

எல்லா பாத்திரத்திலயும் என் பொண்ணு பேர் பெரிசா பொறிச்சிடுங்க...

செலவு பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க என்று சொல்லி கொண்டிருந்தார்...

இன்று வரை ஒரு டம்ப்ளரில் தண்ணீர் எடுத்து குடித்தாலும் அதில் உள்ள என் பெயர் என்னை குத்திக்காட்டி கொண்டே இருக்கிறது.

ஏனோ தெரியவில்லை,

இப்போதுவரை நூடுல்ஸ் சாப்பிடும் எண்ணமும் எனக்கு வரவே இல்லை.

இந்த விஷயத்திலும் நான்தான் தோற்று போனேன்...!

ஓயாத குடைச்சல், எப்பவுமே திட்டு, எப்பவுமே ஒரு அட்வைஸ், எதுக்கெடுத்தாலும் ஒரு பிளாஷ்பேக்,

அம்மா எப்பவுமே இப்படித்தானோ என்ற நினைப்பு இளம்வயதில் வந்தபடியே இருந்தது.

நான் பிரசவ வார்டில் இருந்தபோது,

"அம்மா" என்று எத்தனை முறை கூப்பிட்டிருப்பேன் என்று எனக்கே தெரியாது,

குழந்தையை பெற்று கொண்டு வீடு வந்து சேர்ந்ததும் அவர் ஒரு நிமிடம் சும்மா இல்லையே...

இதை சாப்பிடு

அதை சாப்பிடாதே

இதை குடி

இப்படி திரும்பு

அப்படி படு,

குழந்தையை இப்படி பிடிச்சு தூக்கு

என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

அவ்வளவு காலம் இல்லாமல், அம்மாவின் வயிற்றில் தழும்புகள், வடுக்களை அப்போதுதான் பார்த்தேன்...

பிரசவ போரில் நான் தந்த பரிசு போலும்...

நடுமண்டையில் சுரீரென்று எனக்கு உரைத்தது..

அம்மா எப்பவும் போலவேதான் இருக்கிறார்...

நான்தான் ஒவ்வொன்றிற்கும் எரிச்சல், குடைச்சல், என டிசைன் டிசைனாக பெயர் வைத்து கொண்டு இருந்திருக்கிறேன் என்று...!

இப்போதும் நான்தான் தோற்றேன்...!

என் மகள் குட்டி தேவதை போலவே இருப்பாள் என்று கற்பனை செய்து கொண்டு, தையல் மிஷினில் கைத்தறி துணியில் பாவாடை தைத்து உடுத்தி அழகு பார்க்கும்போதுகூட, எனக்கு கண்ணில் பட்டது என்னவோ அதில் தொங்கி கொண்டும், ஒட்டிக் கொண்டும் இருந்த கலர் கலர் நூல்கள்தான்...

"இந்த டிரஸ் நல்லா இல்லைம்மா,

நூல் நூலா தொங்குது..

இதை பார்த்தா என் பிரண்ட்ஸ் கிண்டல் செய்வாங்கன்னு" தைத்த 2 நிமிசத்துலயே கழற்றி முகத்தில் எறிந்த நிகழ்வின் காலம் உருண்டாலும் இன்னமும் வலித்து கொண்டே இருக்கிறது.

"இவ்ளோ பெரிய பெண்ணாகியும் இன்னும் ரிப்பன் வைத்து சடை பின்னிக்க தெரியலயா",

என்ற அம்மா திட்டிய அதே வார்த்தைகளை இன்று என் மகளிடம் என்னையும் அறியாமல் சொல்வது வியப்பாக உள்ளது...!

எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என் அம்மா...!

இந்த விஷயத்திலும் நான்தான் தோற்று நிற்கிறேன்.

ஏனோ தெரியவில்லை...

என்னை பார்க்கும்போதெல்லாம் ஓயாமல் சொல்லும் பொய்

'ஏன் இப்படி இளைச்சிட்டே, ஏன் இப்படி கறுத்து போயிட்டே' என்பதுதான்..

தட்டில் சட்னி மீதமிருக்குது பாரு, அதுக்காக இன்னும் ஒரே ஒரு தோசை...

என்று சாக்கு சொல்லி சுடச்சுட சுட்டுப்போடும் அலாதியே இன்றும் தனி அழகுதான்...

சாப்பிட்டு முடித்த பிறகு தான் தெரியும் சட்னியை முன்கூட்டியே தட்டில் அதிகமாக ஏன் வைத்தார் என்று..?

அந்த அன்பின் சூட்சுமம்கூட தெரியாமல்

அப்போதும் நான்தான் தோற்று நிற்பேன்...!

எத்தனை விஷயத்தில்தான் நான் இப்படி தோற்று கொண்டே இருப்பேனோ தெரியாது...

இந்த தொடர் தோல்வி எனக்கு பிடித்திருக்கிறது...

காரணம், என் அம்மா சளைக்காமல் வெற்றி பெற்று கொண்டே இருப்பதால்...!!!

உலகின் தலை சிறந்த முதல் தியாகி அம்மா மட்டுமே...

சொக்கி போகும் முதல் உலக அழகிகளும் இவர்களே...!

உலகின் மிக பெரிய பொருளாதார மேதையுமே அம்மா மட்டுமே...!

எத்தனை இடர்பாடுகள்,

எத்தனை துயரங்கள்,

எத்தனை வலிகள்

வந்தால் என்ன..?

உலக உருண்டையில் கலந்துவிட்ட இந்த தாய்மையானது அனைத்தையும் புரட்டி போட்டு கொண்டு மேலே சென்று கொண்டே இருக்கும்...!

எல்லா அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்...!!