வெண் தொண்டை மீன்கொத்தி!..

தனித்துவ அழகுள்ள பறவையினங்களில் ஒன்று வெண் தொண்டை மீன்கொத்தி. வயல்வெளி, காட்டுப்பகுதி என எங்கும் வசிக்கும்.
பளபளக்கும் நீல இறகுகள் உடையது. பழுப்பு நிற மார்பு, வெண் தொண்டை மற்றும் செந்நிற அலகு சிறப்பான தோற்றம் தரும். நீல இறகு, தெளிந்த வானத்தையும், மார்பில் பழுப்பு நிறம் மண்ணை பிரதிபலிக்கிறது. இவை இயற்கையுடன் இணைப்பை வெளிப்படுத்தும்.
மீன்களோடு பூச்சி, பல்லி, தவளை, சிறு பாம்புகளை உண்ணும். மரக்கிளையில் அமர்ந்து, கூர்மை பார்வையுடன் கண்காணித்து, திடீரென நீரில் மூழ்கி மீனை பிடிக்கும். இதன் வேட்டைத் திறன் வியப்பு ஏற்படுத்தும். தனித்துவக் குரலில் பாடும். ஆண்டு முழுதும் இனப்பெருக்கம் செய்யும். மரம், மண் பொந்தில் கூடு கட்டி, ஏழு முட்டைகள் வரை இடும். இந்த பறவையினம் தெற்காசியா முதல் மத்திய கிழக்கு வரை பரவியுள்ளது. இந்தியாவில் பல்லுயிர் பெருக்க மகத்துவத்தை உணர வைக்கும் உயிரனங்களில் ஒன்றாக உள்ளது.