விஷ கொட்டைகளை தின்ற ஐந்து குழந்தைகள் 'சீரியஸ்'

கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அருகே, கொட்டாங்கி விஷ கொட்டைகளை பறித்து தின்ற ஐந்து குழந்தைகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே பில்லனகுப்பம் பஞ்.,க்குட்பட்ட கே.திப்பனப்பள்ளி சிவசக்தி நகரில், குறவர் இனத்தை சேர்ந்த, 42 குடும்பத்தினர் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் அவர்களில் பலர் கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, வேப்பனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு தொழில் ரீதியாக சென்றனர்.
வீடுகளில் தனியாக இருந்த அவர்களின் குழந்தைகள், நிலக்கடலை போன்று செடியில் காய்த்திருந்த, விஷத்தன்மை கொண்ட கொட்டாங்கி செடியின் கொட்டைகளை பறித்து, உப்பு, மிளகாய் சேர்த்து தின்றுள்ளனர். மாலையில், ஐந்து குழந்தைகளுக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். வீடு திரும்பிய பெற்றோர், குழந்தைகளை மீட்டு, கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில், சின்னத்தம்பி என்பவரது மகன்கள் அஸ்வின், 5, ஆசூன், 4, அரவிந்த் மகன் ரிஷின், 5, ரைகாந்தி மகன் மாலின், 5, கேசவன் மகன் தர்ஷன், 5 என, ஐந்து குழந்தைகளும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்