சென்னையில் பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த சைக்கிள்களை குறிவைத்து திருடியவர் கைது

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் சைக்கிள்களை குறிவைத்து திருடி வந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 40 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை கொடுங்கையூர், ஜெய் பாலாஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் எட்வர்ட் (48). இவர் அவரது மகனின் சைக்கிளை வழக்கம் போல் கடந்த 18-ம் தேதி இரவு வீட்டு வளாகத்தில் நிறுத்தியிருந்தார்.
அந்த சைக்கிள் காணாமல் போனது. இது தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அவர் புகார் தெரிவித்தார். அதன்படி, அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதேபோல், சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் சைக்கிள்கள் அடுத்தடுத்து திருடுபோயின.
இந்நிலையில் கொடுங்கையூர் போலீஸார் நடத்திய விசாரணையில் எட்வர்ட் மகனின் சைக்கிளை திருடியது கொடுங்கையூர், பார்வதி நகர் 1-வது தெருவைச் சேர்ந்த தாமோதரன் (54) என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து கொடுங்கையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திருடுபோன 6 சைக்கிள்கள் உட்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட 40 சைக்கிள்கள் மீட்கப்பட்டன.
மேலும் விசாரணையில், கைதான தாமோதரன் கொடுங்கையூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த சைக்கிள்களை நோட்டமிட்டு திருடியுள்ளார். மேலும், அந்த சைக்கிள்களை விற்று மது குடிப்பதோடு, தாராளமாக செலவு செய்துள்ளார். பணம் தீர்ந்தவுடன் மீண்டும் சைக்கிள்களை திருடும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.