நெய்வேலியில் இரிடியம் விற்க முயன்ற 7 பேர் கைது

கடலூர்: நெய்வேலி திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த முருகன் (48), தன்னிடம் இரிடியம் இருப்பதாக திருக்கோவிலூர் சேகர் (48), ஏழுமலை (43), மருங்கூர் மணிகண்டன் (41), நெய்வேலி ஆனந்தன் (38), கூத்தப்பாக்கம் விக்னேஷ்வரன் (33), பிரவீன்குமார் (41) ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இணைந்து இரிடியத்தை விற்க முயற்சிப்பதாக கடலூர் மாவட்ட போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் மாறுவேடத்தில் இரிடியம் வாங்குவதுபோல அந்த கும்பலிடம் பேரம் பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில் மாறுவேடத்தில் இருந்த போலீஸாரை நேற்று நெய்வேலி திடீர் குப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்ற அக்கும்பல், கண்ணாடி பெட்டியில் இருக்கும் ஒரு பொருளை காட்டியுள்ளது. அப்போது, காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார், 7 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 2 கார்கள், ஒரு பைக், இரிடியம் என்று கூறப்படும் பொருள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.