ரேஷன் கார்டில் இறந்தவர் பெயர் நீக்காததால் அரசுக்கு வீண் செலவு

ரேஷன் கார்டில் இறந்தவர் பெயர் நீக்காததால் அரசுக்கு வீண் செலவு
அவர்களது பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படாததால், அவர்களுக்குரிய பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு தொடர்ந்து அனுப்பப்படுகின்றன.

சென்னை:தமிழகத்தில் மாதம் சராசரியாக, 35,000 முதல் 40,000 பேர் வரை, இறக்கும் நிலையில், அவர்களது பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படாததால், அவர்களுக்குரிய பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு தொடர்ந்து அனுப்பப்படுகின்றன. இதனால், அரசுக்கு கூடுதல் செலவாகி வருகிறது.

தமிழக ரேஷன் கடைகளில், அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு, மாதம் அதிகபட்சம், 35 கிலோ அரிசி; முன்னுரிமை கார்டுதாரர்களுக்கு, கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா, 5 கிலோ அரிசி, இலவசமாக வழங்கப்படுகிறது. முன்னுரிமையற்ற அரிசி கார்டுதாரர்களுக்கு, மாதம், 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.

ஒரு கார்டில், ஒரே நபர் இருந்தாலும், 12 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இது தவிர, 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் பாமாயில், 2 கிலோ சர்க்கரை குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இதற்காக அரசு ஆண்டுக்கு, 12,500 கோடி ரூபாய் செலவிடுகிறது. ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர் இறந்து விட்டால், அவரின் இறப்பு சான்றை சமர்ப்பித்து, கார்டில் இருந்து பெயரை நீக்க வேண்டும். பெரும்பாலானோர் இதை செய்யாததால், இறந்தவர்களுக்குரிய பொருட்கள், ரேஷன் கடைகளுக்கு தொடர்ந்து அனுப்பப்படுகின்றன.

இது குறித்து, உணவு வழங்கல் துறை உதவி ஆணையர் ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் மாதம் சராசரியாக, 35,000 முதல் 40,000 பேர் வரை இறக்கின்றனர். ஒருவர் உயிரிழந்தால், சுகாதாரத் துறை சார்பில், இறப்பு சான்று வழங்கப்படுகிறது. இதை சமர்ப்பித்து, ரேஷன் கார்டில் இருந்து, இறந்தவர் பெயரை, பலர் நீக்குவதில்லை. ரேஷன் திட்டம், 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டு உள்ளது.

எனவே, இறந்தவர் பெயரை பதிவு செய்யும் போது, ஆதார் பெறப்படுகிறது. அந்த விபரத்தை உணவுத் துறைக்கு தெரிவிக்கும் வகையில், மென்பொருள் உருவாக்கி, இணைப்பு வசதிகளை, அரசு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால், ஒருவர் உயிரிழந்தது பதிவு செய்யப்பட்டதும், உணவுத் துறை ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்கும். அடுத்த மாதத்தில் இருந்து, இறந்தவருக்கு உரிய பொருட்கள் அனுப்புவது நிறுத்தப்படும். இதனால் அரசுக்கு செலவும் குறையும். இவ்வாறு கூறினார்.