ரூ.3,500 கோடி மதுபான ஊழல்...

ரூ.3,500 கோடி மதுபான ஊழல்...
ஜெகன்மோகன் மாதந்தோறும் ரூ.60 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்...

மதுபான ஊழலை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டியை கைது செய்தது.

முதல் குற்றவாளியாக காசிரெட்டி ராஜசேகர் ரெட்டி என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

அமராவதி:

ரூ.3 ஆயிரத்து 500 கோடி மதுபான ஊழலில் கிடைத்த லஞ்சப்பணம் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆந்திர போலீஸ் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

எம்.பி. கைது

ஆந்திர மாநிலத்தில், கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசு நடந்து வந்தது.

அப்போது, மதுபான விற்பனையில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி ஊழல் நடந்ததாக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மதுபான ஊழலில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த மே மாதம் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, மதுபான ஊழலை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு, நேற்று முன்தினம் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டியை கைது செய்தது. பல மணி நேர விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, அமராவதி கோர்ட்டில் ஆந்திர போலீசார் இவ்வழக்கு தொடர்பாக 305 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அதில், முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை. இருப்பினும், அவர் மதுபான ஊழல் பணத்தை பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

முதல் குற்றவாளியாக காசிரெட்டி ராஜசேகர் ரெட்டி என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் புதிய மதுபான கொள்கையை கொண்டு வந்தனர். மதுபான சப்ளை, விற்பனை ஆகியவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலம், லஞ்சம், கமிஷன் பெறும் நோக்கத்தில் இருந்தனர்.

அதற்கேற்ப மதுபான tcu கட்டிகளாகவும் பெறப்பட்டன.

ரூ.3,500 கோடி ஊழலின் மூளையாக முதல்  காசிரெட்டி ராஜசேகர் ரெட்டி செயல்பட்டார். லஞ்சமாக வசூலிக்கப்பட்ட பணம், ராஜசேகர ரெட்டியிடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம்.

அந்த லஞ்சப்பணத்தை 5-வது குற்றவாளி விஜய் சாய் ரெட்டி, 4-வது குற்றவாளி மிதுன் ரெட்டி, 33-வது குற்றவாளி பாலாஜி ஆகியோருக்கு ராஜசேகர் ரெட்டி அனுப்பி வைப்பார். அதை அப்போதைய முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு பாலாஜி அனுப்பி வைப்பார். மாதந்தோறும் சராசரியாக ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடி வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டது.

ராஜசேகர் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் செலவுக்காக ரூ.250 முதல் ரூ.300 கோடியை திருப்பி விட்டார். சட்டவிரோத பண பரிமாற்றத்துக்காக 30 போலி மதுஆலைகள் உருவாக்கப்பட்டன.

லஞ்சம் கொடுக்க விரும்பாத மது ஆலைகளுக்கு உரிய அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டது. துபாய், ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் நிலம், தங்கம், ஆடம்பர சொத்துகள் ஆகியவற்றை வாங்க ஊழல் பணம் பயன்படுத்தப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது