மக்கள் தொகை சரிவால் சீனா கவலை: ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் நிதி வழங்க முடிவு

மக்கள் தொகை சரிவால் சீனா கவலை: ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் நிதி வழங்க முடிவு
தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக, புதிய திட்டம் ஒன்றை சீனா அறிவித்துள்ளது;

பெய்ஜிங்,

உலகில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த சீனா, மக்கள் தொகையை குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் தற்போது மக்கள் தொகை எண்ணிக்கையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் முதலிடத்தில் இந்தியா உள்ளது.

தற்போது, தான் எதிர்பார்த்ததை விட மக்கள் தொகை வேகமாக சரிந்ததால் சீனா கவலை அடைந்துள்ளது. குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்விக்கான அதிகச் செலவு, வேலையின்மை தான், சீனா இளைஞர்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை தவிர்ப்பதற்கான காரணம் என மக்கள்தொகை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மக்கள் தொகை சரிவதால் கவலை அடைந்துள்ள சீனா அதை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி, தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக, புதிய திட்டம் ஒன்றை சீனா அறிவித்துள்ளது. இதன்படி, நடப்பு ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் 50 ஆயிரம்) மானியம் வழங்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது. இந்த நிதி குழந்தையின் 3 வயது வரை வழங்கப்படும். அதாவது ஒரு குழந்தைக்கு ரூ.1.30 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.