ஆட்டுக்கறி ரூ.40, மைக்கிள்ஸ் ஐஸ்கிரீம் ! - 70களில் திருச்சி | கிறிஸ்துமஸ் இரவுகள் 3

ஆட்டுக்கறி ரூ.40, மைக்கிள்ஸ் ஐஸ்கிரீம் ! - 70களில் திருச்சி | கிறிஸ்துமஸ் இரவுகள் 3
ஆட்டோக்கள் அறியப்படாத அந்த காலகட்டத்தில் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் வாடகைக்கு கிடைக்கும். இரவு நேரத்தில் இஞ்ஞாசி என்ற ஒரு சைக்கிள் ரிக்‌ஷாக்காரர் தன் ரிக்‌ஷாவை நிறுத்தி இருப்பார். அவர் நல்ல மூடில் இருந்தால் அவர் ரிக்‌ஷாவை காலனி சிறுவர்களாகிய நாங்கள் சிறிது தூரம் ஓட்ட அனுமதிப்பார்

திருச்சியின் நடுமையப் பகுதியில் அமைந்த கோட்டை வாசலால் மெயின்கார்ட்கேட் (Main Guard Gate) என்று அழைக்கப்பட்ட மெயின்கார்ட் கேட்டில் பிரபலமான ஒரு நபரைப் பற்றி இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

அவன் பெயர் அப்துல்லா. அவர் எங்கிருந்து வந்தார், அவர் சொந்த ஊர் எது, சொந்த பெயர் எது என்று யாருக்கும் தெரியாது. உடம்பு முழுவதும் அழுக்கான துணி முடிச்சுகளை அணிந்து கொண்டு அந்த அரசமரம் தாண்டி சிறிது தொலைவில் இருக்கும் வேப்பமரத்தின் அருகில் சாலை ஓரம் அமர்ந்திருப்பார். அவர் அருகில் ஒரு டால்டா டின் இருக்கும். அந்த டால்டா டின்னில் தான் அவர் டீ குடிப்பான்.

யாரையும் அவர் தொந்தரவு செய்வது கிடையாது. குளிக்காமல் தூசியில் அமர்ந்தும் உறங்கியும் இருப்பதால் அவர் உடம்பும் தலை முடியும் தூசி படிந்து அழுக்காக காணப்படும். அப்பொழுது ஜாஃபர்சா தெரு அருகில் குடியிருந்த சில ஈரானியர்களும் பார்சிக்களும் சில சமயம் அப்துல்லா அருகில் அமர்ந்து ஏதோ பேசி செல்வார்கள்...

மற்ற அனைவரையும் பயமுறுத்தும் படி இருக்கும் அப்துல்லா அவர்களிடம் அமைதியாக பேசுவார் அல்லது அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பார். அவரிடம் பேசிவிட்டு அவர்கள் செல்லும் பொழுது ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் கொடுத்து செல்வர்.

அந்த ரூபாய் நோட்டுகளையும் சில்லறைகளையும் அவன் எங்கே சேமித்து வைப்பான் என்பது அனைவருக்கும் ஒரு புரியாத புதிராகவே கடைசிவரை இருந்தது.அவன் கைவிரல்களில் கற்கள் பதித்த மோதிரங்களும் இருக்கும்.

பிரிட்டோ காலனி பையன்கள் அவரை கடந்து செல்லும் பொழுது பயத்துடன் ஓடியே கடந்து செல்வர். அப்துல்லா அதை கண்டும் காணாதது போல் இருப்பான். காலனி பையன்கள் விடுமுறை நாட்களில் கூட்டு சேர்ந்து கொண்டு அவன் மேல் கல்லெறிந்து அவனை சீண்டுவர்.

அப்துல்லா பொறுமையாக இருப்பான். பொறுமை எல்லை கடக்கும் பொழுது எழுந்து அந்த சிறுவர்களை பிடிப்பது போல் துரத்தி வருவான். அவன் ஓடி வரும் பொழுது அவன் போட்டிருக்கும் துணி முடிச்சுகள் எல்லாம் ஆடும். ஆனால் நான் அறிந்தவரை அப்துல்லா யாரையும் பிடித்ததுமில்லை: அடித்ததுமில்லை

அந்த காலகட்டத்தில் பிரபலமாகிக் கொண்டிருந்த இரும்புகை மாயாவி, லாரன்ஸ் மற்றும் டேவிட்டை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய முத்து காமிக்ஸ் புத்தகங்களும் எப்பொழுதுமே அந்த கடையில் கிடைக்கும். ஒரு ரூபாய் விலையில் கிடைத்த காமிக்ஸ் புத்தகங்கள் வாங்க முடியாதபொழுது பத்து பைசா வாடகை கொடுத்து இந்த புத்தகங்களை வாடகைக்கு வாங்குவோம். வாங்கி படித்துவிட்டு திரும்ப கடையிலேயே கொடுத்துவிடவேண்டும்.

அந்த முன்னால் குறிப்பிடப்பட்ட வேப்பமரத்தின் அருகில் பாய் கடை என்றழைக்கப்படும் பெட்டிக்கடை இருந்தது. திருச்சியில் அப்பொது இருந்த பெட்டிக்கடைகளில் அனேக கடைகள் இஸ்லாமியர்களாலேயே நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பிரிட்டோ காலனி வாசிகளுக்கு பாய் கடை என்றால் காலனி நுழைவு வாயிலை ஒட்டி அமைந்திருந்த பெட்டிக்கடையே ஆகும்.

இது தவிர்த்து அந்த காலத்தில் விஷேசமான கடலை மிட்டாய், தேன் மிட்டாய், கமர்கட்டு, இலந்தை உருண்டை போன்ற பலவித மிட்டாய்களும் ந்யூட்ரின் சாக்லெட்டுகளும் கிடைக்கும். அப்போது காட்பரிஸ் சாக்லெட்டுகளோ எக்ளேர்ஸ் போன்றவைகளோ சந்தைக்கு பரவலாக வராத நேரம். அதிகபட்சமாக பால்கோவா பாக்கெட் கிடைக்கும்....

இது தவிர்த்து அனைத்துவிதமான ஆங்கில மற்றும் தமிழ் செய்தித் தாள்களும் இக்கடையில் கிடைக்கும். மேலும் எல்லா வார பத்திரிக்கைகளும் பாய் கடையில் கிடைக்கும். அந்த காலகட்டத்தில் பிரபலமாகிக் கொண்டிருந்த இரும்புகை மாயாவி, லாரன்ஸ் மற்றும் டேவிட்டை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய முத்து காமிக்ஸ் புத்தகங்களும் எப்பொழுதுமே அந்த கடையில் கிடைக்கும்.

ஒரு ரூபாய் விலையில் கிடைத்த காமிக்ஸ் புத்தகங்கள் வாங்க முடியாதபொழுது பத்து பைசா வாடகை கொடுத்து இந்த புத்தகங்களை வாடகைக்கு வாங்குவோம். வாங்கி படித்துவிட்டு திரும்ப கடையிலேயே கொடுத்துவிடவேண்டும்.

இந்த பாய் கடையின் அருகில் எடை பார்க்கும் இயந்திரம் ஒன்று இருந்தது. அந்த இயந்திரத்தின் மேல் ஏறி நின்று ஒரு பத்து பைசா நாணயத்தை போட்டால் எடை குறிக்கப்பட்ட ஒரு அட்டை வந்து விழும். அந்த அட்டையில் யாராவது ஒரு நடிகர் அல்லது நடிகையின் படம் இருக்கும். அந்த அட்டையின் பின்னால் ஏதாவது ஒரு செய்தி இருக்கும்,” நண்பர்களால் கஷ்டம், பணத்தொல்லை “ என்பது போல்..

சாப்பாட்டு சமயத்தில் அனைவரும் தடுக்கு எனப்படும் சாப்பாட்டு பாய்கள் மேல் அமர்ந்து உணவு உண்போம். எங்கள் அப்பா மனை பலகையின் மேல் அமர்ந்து உணவு உண்பார். அதன் உள் அர்த்தம் எனக்கு இன்று வரை புரியவில்லை. 

காலனி நுழைவு வாயிலில் இரண்டு பெரிய இரும்பு கேட்கள் இருக்கும். அந்த கேட்கள் எப்பொழுதும் திறந்தே இருக்கும். பகல் நேரங்களில் அவை மூடி நான் பார்த்ததே இல்லை.

காலனி வாயிலை அடுத்து தென்புறம் முன்னாளில் மைக்கிள்ஸ் ஐஸ்கிரீம் கடை –இப்போதைய பாங்க் ஆஃப் இந்தியா இருக்கும் கட்டிடத்தில் தான் – இருந்தது. வங்கிக்கு வாடகை விட்டபொழுது மைக்கிள்ஸ் ஐஸ்கிரீம் இப்பொழுது இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது...

மைக்கிள்ஸ் ஐஸ்கிரீம் கடை மாறியதில் எங்களுக்கு ஒரு ஆதாயமும் இருந்தது. ஐஸ்கிரீம் கடையின் பின்பக்க ஜன்னல் வழியாகவே நாங்கள் ஐஸ்கிரீம் வாங்கிக் கொள்வோம். அந்த கடையில் ஆறுமுகம், மணி என்ற இரு பையன்கள் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் இருவரும் கடையிலேயே இரவு படுத்து உறங்குவர்.

எங்கள் வீட்டிற்கு ஐஸ்கிரீம் வாங்கும் பொழுது ஒரு ஸ்கூப்பிற்கு மேல் இன்னொரு ஸ்கூப் கிடைக்கும். முதலில் வெனிலா ஐஸ்கிரீமும் ஃப்ரூட் சாலட்டும் தான் மைக்கிள்சில் கிடைக்கும். இப்பொழுதோ சாக்லெட் போன்ற பல்வேறு வகையான ஐஸ்கிரீம்கள் சகாய விலையில் கிடைக்கின்றன.  

ஐஸ்கிரீம் செய்ய தேவையான பால், காலனியில் ஒரு கொட்டகையில் காய்ச்சப்படும். இந்த கொட்டகை மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டு இருக்கும். முதல் பகுதியில் சோடாவிற்கும் கலர் குடிபானத்திற்கும் க்யாஸ் ஏற்றும் இயந்திரம் இருக்கும்.பெரிய மீசை வைத்துக்கொண்டிருக்கும் ராம்தாஸ் என்ற ஒருவர் பாட்டில்களில் நிரப்பப்பட்ட கலர் பானத்தில் க்யாஸ் ஏற்றுவார். நடு பகுதியில் தேவைப்படாத தட்டுமுட்டு சாமான்கள் நிரம்பி கிடக்கும்.

மூன்றாவது பகுதியில் இரண்டு அடுப்புகள் அமைந்திருக்கும், அதில் ஒரு அடுப்பில் தான் ஐஸ்கிரீமின் மூலப்பொருளான பால் காய்ச்சப்படும். இன்னொரு அடுப்பில் கலர் குடிபானம் தயாரிக்க தண்ணீரில் சர்க்கரை கலந்து காய்ச்சுவர்.

இந்த பால் இரவு முழுதும் காய்ச்சப்பட்டு பின்னர் சர்க்கரை கலந்து ருசியாக இருக்கும். இந்த காய்ச்சப்பட்ட பாலின் ஆடையை நாங்கள் திருட்டுத்தனமாக திருடி சாப்பிடுவோம். கடை சொந்தக்கார சகோதரர்களில் ஒருவரின் மனைவி எப்போதாவது ஒருமுறை வெண்ணெய் திரட்டுவார். அப்போது கிடைக்கும் கக்கம் என்று அழைக்கப்படும் கசடு எங்கள் வீட்டிற்கும் வரும். இனிப்பு கடைகள் வருவதற்கு முன் தயாரிக்கப்பட்ட இனிப்பு ஆதலால் அதை பகிர்ந்து கொள்ள அம்மாவிடம் மிகுந்த போட்டி இருக்கும்.

எங்கள் காலனிக்கு எதிரே தான் பிஷப் ஹீபர் பள்ளி அமைந்திருந்தது. அப்பள்ளியின் விளையாட்டு மைதானம் மிகப் பெரிதாக இருக்கும். இந்த விளையாட்டு மைதானத்தில் தான் பொருட்காட்சிகள் நடைபெறும். அரசியல் கட்சி கூட்டங்களும், விளையாட்டு போட்டிகளும், ஜெபக்கூட்டங்களும் பிஷப் ஹீபர் பள்ளி விளையாட்டு மைதானத்திலேயே நடைபெறும். எனக்கு தெரிந்து துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டுவிழா கூட ஒருமுறை இங்கு தான் நடைபெற்றது...