ராணிப்பேட்டை: மாணவியை கத்தியால் வெட்டிய இளைஞர் கைது!

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர், ஆற்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், மாணவி நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து, மேல் நேத்தம் பாக்கம் கூட்டு சாலையில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது, அங்கு வந்த இளைஞர் திடீரென மாணவியை வலது பக்கம் கழுத்திலும், இடது பக்கம் மணிக்கட்டு பகுதியில் வெட்டி விட்டு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.
படுகாயமடைந்த மாணவியை அருகே இருந்தவர்கள் மீட்டு கலவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து கலவை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அகரம் கிராமத்தைச் சேர்ந்த கவியரசு (21) என்பவரை கைது செய்தனர்.
ஒரு தலை காதல் விவகாரத்தில் மாணவியை இளைஞர் வெட்டியதும், அவர் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.