பிஎஃப் பணம்.. சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி, வேலூர்.. 10 மாவட்டங்களுக்கு 28ம் தேதி நல்ல செய்தி

பிஎஃப் பணம்.. சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி, வேலூர்.. 10 மாவட்டங்களுக்கு 28ம் தேதி நல்ல செய்தி
உங்கள் அருகில்' என்ற தலைப்பில் மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்

சென்னை: "வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்' என்ற தலைப்பில் மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் குறைதீர்க்கும் முகாமினை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது. அந்தவகையில், வருகிற ஜூலை 28 ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை குறைதீர்க்கும் முகாம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 10 இடங்களில் நடைபெற உள்ளது.

சென்னை, புதுச்சேரி மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எம்.எச்.வார்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "'வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்' எனும் குறைதீர் முகாம் 28 ந் தேதி (திங்கட்கிழமை) சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் நடக்கிறது.

சென்னை எழும்பூர் அசோகா ஓட்டல், திருமழிசை இந்திய ஜப்பான் லைட்டிங் நிறுவனம், ஸ்ரீபெரும்புதூர் ஆக்சல் இந்தியா நிறுவனம், குரோம்பேட்டை நாகல்கேணி பகுதியில் உள்ள தி பல்லாவரம் டேனர்ஸ் அசோசியேசன், வேலூர் பெரிய அல்லாபுரம் வேலம்மாள் போதி கேம்பஸ், ஆரணி அல்முபீன் ஆரம்ப பள்ளி, ராணிப்பேட்டை கோஸ்டல் இந்தியா நிறுவனம், ஆம்பூர் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தக வளாகம், புதுச்சேரி தர்மபுரி ஏ.எஸ்.ஏ. கல்யாண மண்டபம், காரைக்கால் கோவில்பட்டு பிரைட் பட்ஸ் பள்ளி ஆகிய இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது..

வருங்கால வைப்பு நிதி கணக்குடன் ஆதாரை இணைத்தல், வாரிசுதாரர் பதிவு, ஆன்லைன் சேவை போன்றவை குறித்து முகாமில் விளக்கப்படுகிறது. வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும் விவரிக்கப்படுகிறது. முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் கூகுள் படிவத்தை அனுப்பி பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் நிறுவன முதலாளிகள், ஒப்பந்ததாரர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறைகளை பிஎஃப் அதிகாரிகள் விளக்குவார்கள்.. தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றியும் வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் விளக்குவார்கள். மேலும் இபிஎப்ஷ விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல் நடைபெறும். மேலும் வைப்பு நிதி அலுவலகத்தின் புதிய முயற்சிகள், சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்..

அதேபோல் பிஎஃப் கணக்கு வைத்துள்ள உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் நிறுவன முதலாளிகளிடம் இருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்யப்படும்.. ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு வாழ்க்கைச் சான்றிதழ்களை சமர்ப்பித்தல், இ நாமினேஷன் தாக்கல் செய்தல் மற்றும் ஒப்பந்ததாரர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகளும் உடனே மேற்கொள்ளப்படுவது வழக்கம். எனவே ஃபிஎப் பணம் மற்றும் பிஎஃப் கணக்கு தொடர்பான புகார்கள் குறித்து குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுத்தால் உடனடியாக அதிகாரிகள் நிவர்த்தி செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.