இனி Gpay, Phonepeஇல் பணம் அனுப்ப கட்டணம்? யுபிஐ கட்டணம் குறித்து சூசகமாக சொன்ன ரிசர்வ் வங்கி கவர்னர்

சென்னை: இப்போது வரை யுபிஐ மூலம் பணம் அனுப்புவது இலவசமாகவே இருந்து வருகிறது. மக்கள் அதிகளவில் யுபிஐ பயன்படுத்தவும் இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது. ஆனால், இந்த நிலை விரைவில் மாறலாம் என சொல்லப்படுகிறது. அதாவது வரும் காலத்தில் யுபிஐ சேவைக்குக் கட்டணம் விதிக்கப்படலாம். ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இது தொடர்பாகச் சூசகமாக சில கருத்துகளைக் கூறியிருக்கிறார்..
நமது நாட்டில் இப்போது யுபிஐ மூலமாகவே பெரும்பாலானோர் பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். ரொக்கமாகப் பணத்தை எடுத்துச் சென்றால் திருட்டு பயம், சில்லறை பிரச்சனை என ஏகப்பட்ட சிக்கல் வரும். யுபிஐ முறையில் அது எதுவுமே இல்லை. மேலும், யுபிஐ மூலம் பணம் அனுப்பும் போது கட்டணம் எதுவும் இல்லை. இதுவே பலரும் யுபிஐ பக்கம் செல்ல முக்கிய காரணமாக இருக்கிறது.
யுபிஐ கட்டணம்
ஆனால், இந்த நிலை விரைவில் மாறலாம் எனச் சொல்லப்படுகிறது. பிரபல ஆங்கில ஊடகம் சார்பில் நடந்த ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் பிஎஃப்எஸ்ஐ என்ற நிகழ்வில் பங்கேற்ற ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். யுபிஐ மூலம் செய்யப்படும் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் அனைத்தும் வரும் காலத்தில் இலவசமாக இருக்காது என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா சூசகமாகத் தெரிவித்தார்.
இப்போது யுபிஐ யூசர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி பணம் அனுப்பும்போது மக்களுக்குக் கட்டணம் இல்லை. அதேபோல இதில் பேமெண்ட் வாங்கும் கடைக்காரர்களுக்கும் தனியாகக் கட்டணம் இல்லை. யுபிஐ குறுகிய காலத்தில் இந்தளவுக்குப் பிரபலமாக இதுவே முக்கிய காரணமாக இருந்தது. அதேநேரம் இந்த பேபெண்ட் கட்டமைப்பைப் பராமரிக்க ஆகும் கட்டணத்தை அரசே ஏற்று வருகிறது. இதற்கான கட்டணத்தை அரசு வங்கிகளுக்குக் கொடுத்துவிடுகிறது.
ஆர்பிஐ கவர்னர் சொல்வது என்ன
இந்தச் சூழலில் தான் யுபிஐ குறித்து ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்த கருத்துகளைக் கூறியிருக்கிறார். யுபிஐ குறித்துப் பேசும்போது அவர், "பேமெண்ட் என்பது ஒரு முக்கியமான விஷயம். நமக்கு ஒரு சிறந்த கட்டமைப்பு தேவை. தற்போது யுபிஐ சேவையில் எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இதைப் பராமரிக்க ஆகும் செலவுகளை வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு அரசு வழங்கி வருகிறது. ஆனால், சில செலவுகளைச் செலுத்தியாக வேண்டும்.
எந்தவொரு முக்கியமான உள்கட்டமைப்புக்கும் பலன் இருக்க வேண்டும். எந்த ஒரு சேவையும் நிலையானதாக இருக்க வேண்டுமென்றால், அதற்கான கட்டணத்தை யாராவது செலுத்தியாக வேண்டும். அது யூசராக இருக்க வேண்டும் அல்லது வேறு யாராக இருக்க வேண்டும். மொத்தத்தில் இதற்கான கட்டணம் செலுத்தியே ஆகவேண்டும்" என்று குறிப்பிட்டார். யுபிஐ பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது வங்கிகள், பேமெண்ட் சர்வீஸ் புரோவைடர் மற்றும் NPCIஇன் உள்கட்டமைப்பில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் முதலிடம்
கடந்த ஜூன் மாதம் தான் யுபிஐ பரிவத்தனைகள் சர்வதேச பேமெண்ட் முறையான விசாவை விஞ்சியது. இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் UPI மூலம் 18.39 பில்லியன் பரிவர்த்தனைகளில் ₹24.03 லட்சம் கோடிக்கு மேல் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் பேமெண்ட் முறைகளில் டாப் இடத்தை யுபிஐ பிடித்துள்ளது. இப்போதுஇந்தியாவின் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் சுமார் 85% மற்றும் உலகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் கிட்டத்தட்ட 50% யுபிஐ மூலமாகவே நடைபெறுகிறது..
விரைவில் கட்டணம்
பொதுவாக விசா அல்லது மாஸ்டர் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது, கடைக்காரர்கள் குறிப்பிட்ட சதவிகிதத்தைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஆனால், யுபிஐ பேமெண்டுகளில் கடைக்காரர்களுக்கும் கட்டணம் இல்லை. இதனால் யுபிஐ பரிவர்த்தனைகள் மூலம் எந்த வருவாயும் கிடைப்பதில்லை. இதே மாடல் நீண்ட காலம் தொடர்ந்தால் அது நிலையானதாக இருக்காது என்று பல்வேறு பொருளாதார வல்லுநர்களும் எச்சரித்து வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் ஆர்பிஐ கவர்னரும் கிட்டத்தட்ட அதே கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
டிசம்பர் 2019இல் ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான MDRஐ தள்ளுபடி செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த கட்டணம், பொதுவாகப் பரிவர்த்தனை மதிப்பில் 1% முதல் 3% வரை இருக்கும். யுபிஐ உள்கட்டமைப்பு பராமரிப்பு செலவைச் சமாளிக்க இந்த MDR மீண்டும் கொண்டு வரப்படலாம் என்கிறார்கள். அதாவது யூசர்களுக்கு இது தொடர்ந்து இலவசமாக இருக்கும் அதேநேரம் கடைக்காரர்கள் இதற்குச் சிறிய கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருக்கும். இருப்பினும், இது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.