மூடுவிழா நடத்தும் ராமதாஸ்

மூடுவிழா நடத்தும் ராமதாஸ்
தமிழக மக்கள் உரிமை மீட்பு'நடை பயணத்தை துவக்கியுள்ளார்,அன்புமணி

செ.சாந்தி, மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையிலான மோதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், 'தமிழக மக்கள் உரிமை மீட்பு' நடை பயணத்தை துவக்கியுள்ளார், அன்புமணி.

இந்நிலையில், 'இந்நடை பயணத்தை தடைசெய்ய வேண்டும்; இதனால், வட மாவட்டங்களில் சட்டம் -- ஒழுங்கு பாதிக்கப்படும்' என்று டி.ஜி.பி.,சங்கர் ஜிவாலுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக புகார் கொடுத்துள்ளார், ராமதாஸ்.

கடந்த 1980ல் வன்னியர் சங்கத்தை ஆரம்பித்த ராமதாஸ், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு மத்திய அரசில், 2 சதவீதமும் மாநிலத்தில், 20 சதவீதமும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்து, 1986, மே 6ல் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்.

பின், அதே ஆண்டு டிசம்பரில் ரயில் மறியல் என்று மறியல் போராட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டார்.

அதைத் தொடர்ந்து, 1987ல் தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில், ஏழு நாட்கள் தொடர் சாலைமறியல் போராட்டம் நடத்தி னார். அப்போது நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில், 21 பேர் உயிரிழந்தனர்.

வெறுமனே சாலையில் இறங்கி போராடிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது, அரசியல் ரீதியாக தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 1989, ஜூலையில் பா.ம.க., என்ற அரசியல் கட்சியை துவங்கினார்.

அதன்பின், அரசியல் ரீதியான பல போராட்டங்களை நடத்தினார்.

அத்துடன் நிறுத்தினாரா... சினிமா நடிகர்களை எதிர்த்து வந்ததுடன், நடிகர்கள் ரஜினிகாந்த் நடித்த பாபா , விஜயகாந்த் நடித்த கஜேந்திரா திரைப்படங்களை ஓடவிடாமல் தடுத்தார்.

இப்படி வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க., சார்பாக, துாக்கு கயிறு போராட்டம், ஒப்பாரி வைத்தல், பூட்டு போடுதல், கடலில் இறங்கி போராட்டம் என்று பல்வேறு விநோதமான போராட்டங்களை எல்லாம் நடத்தி, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தினார், ராமதாஸ்.

இதன் காரணமாக, 'மரம் வெட்டி, குடிசை கொளுத்தி' போன்ற சிறப்பு அடைமொழி பெயர்களையும் பெற்றார்.

ஆனால், இன்று அன்புமணியின் நடைபயணம் சட்டம் - ஒழுங்கை பாதிக்கும் என்று கூறுகிறார்.

அப்படியெனில், கடந்த காலங்களில் ராமதாஸ் நடத்திய போராட்டங்கள் எல்லாம் மகாத்மா காந்தி நடத்திய அஹிம்சை வழி போராட்டமா?

அப்போது எல்லாம் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருந்ததா?

'அறப்படித்த பூனை கரடிப் பானைக்குள் தலையை விட்டது' போல், மகனை எதிர்க்கிறேன் பேர்வழி என்று பா.ம.க.,விற்கு மூடுவிழா நடத்தி விடுவார் போலிருக்கே!

ஊழல்வாதிகளுக்கு ஓட்டு இல்லை!

அ.குணா, கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியல் வரலாற்றில், காங்கிரஸ் ஆட்சிக்கு தமிழக மக்கள் எப்போது முடிவுரை எழுதினரோ, அன்றே தமிழகத்தின் வீழ்ச்சியும் ஆரம்பமாகி விட்டது. அப்பழுக்கற்ற காமராஜரை அவரது சொந்த தொகுதியான விருதுநகரிலேயே மக்கள் புறக்கணித்ததில் இருந்து தெரிந்து கொள்ளலாம், நமது தேர்தல் அரசியல் எப்படிப்பட்டது என்பதை!

ஒன்பது ஆண்டுகள் பொற்கால ஆட்சி செய்த காமராஜரையே தோல்வி அடையச் செய்தவர்கள் தான், தமிழக மக்கள். இதை, இன்று ஆட்சியில் இருக்கும் தி.மு.க.,வும், ஆளத் துடிக்கும் அ.தி.மு.க.,வும் நன்கு உணர வேண்டும்.

தான்' என்ற அகம்பாவத்துடன் கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளை நம்பி, வெற்றி பெற்று விடலாம், கூடவே, ஓட்டுக்கு சில ஆயிரங்களை அள்ளி வீசினால், மக்கள் ஓட்டுப் போட்டு விடுவர் என்று தப்பு கணக்கு போட்டு வருகின்றனர்.

அத்துடன், கடந்த 2024 பார்லிமென்ட் தேர்தலில் தங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அனைத்து கட்சிகளும், 2026 சட்டசபைத் தேர்தலிலும் தங்களுடன் களம் காணும் என்ற நம்பிக்கையில் உள்ளது, தி.மு.க.,

அதேபோன்று, அ.தி.மு.க.,வும் தங்கள் கூட்டணிக்கு தற்போது உள்ள பா.ஜ.,வைத் தவிர மேலும் சில கட்சிகள் வரும் என்று நம்பிக்கையுடன், கதவைத் திறந்து வைத்து காத்துள்ளது.

முதல்வர் வேட்பாளர் கனவுடன், த.வெ.க., தலைவர் விஜயும், அவரை முதல்வராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளை, தன்னுடன் இணைத்துக் கொள்ள காத்துள்ளார்.

எப்போதும் தனித்தே தேர்தல் களம் காணும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் களத்தில் உள்ளார்.

கடந்த 1967 க்கு முன் தமிழகத்தில் முதல்வராக இருந்த எவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லை; அவர்கள் குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஊழல் செய்து சொத்துக்கள் வாங்கி குவித்ததாக குற்ற வழக்குகள் இல்லை.

ஆனால், அதன்பின் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த திராவிட கட்சியினர், எப்படி ஊழல் செய்து சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர் என் பதை அனைவரும் அறிவர்.

எனவே, வரும் சட்டசபை தேர்தலில், ஓட்டுப் போடும் அனைவரும், ஊழல் செய்யாத உத்தமருக்குத் தான் ஓட்டு என்பதை முடிவு செய்து விட்டால், நிச்சயம் நல்ல ஆட்சி மாற்றம் ஏற்படும்!

பறக்க துடிக்கும் பழனிசாமி!

கே.ஆர்.அனந்த பத்மநாபன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகி, விஜயுடன் கூட்டணி அமைக்க முனைப்பு காட்டுவதாக தெரிகிறது.

சிறுபான்மை ஓட்டுகளை பெற விஜய் ஆர்வம் காட்டினால், அது தவறு இல்லை. ஏனென்றால், அவர் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்.

ஆனால், அ.தி.மு.க., - பா.ஜ., வாக்காளர்கள், தேசம் மற்றும் தெய்வ பக்தி கொண்டவர்கள்.

என்னதான் பழனிசாமி குட்டிக்கரணம் அடித்தாலும், சிறுபான்மை ஓட்டு களை பெற முடியாது. காரணம், அதை, ஏற்கனவே தி.மு.க., தக் கவைத்துக் கொண்டுள்ளது.

த.வெ.க., - அ.தி.மு.க., கூட்டணி ஏற்பட்டால், சிறுபான்மை ஓட்டுகள் கிடைக்கலாம். அதேநேரம், பா.ஜ.,வை விலக்கி விட்டு, த.வெ.க.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைத்தால், அது, ஏற்கனவே தக்க வைத்துள்ள, 10 சதவிகித ஹிந்து ஓட்டுகளை அ.தி.மு.க., இழக்க நேரிடும்.

பா.ஜ., இல்லை என்றால், கொங்கு பகுதி மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னி யா குமரி, ராமநாதபுரம் போன்றவற்றில் அ.தி.மு.க., வெற்றி பெறாது.

எனவே, இருப்பதை விட்டு பறக்க துடித்தால், இருப்பதும் இல்லாமல் போய் விடும் என்பதை பழனிசாமி உணர்ந்து கொள்ள வேண்டும்