தமிழிசைக்கு அனுமதி, செல்வப்பெருந்தகைக்கு மறுப்பு? காஞ்சி கோவிலில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டதா?

தமிழிசைக்கு அனுமதி, செல்வப்பெருந்தகைக்கு மறுப்பு? காஞ்சி கோவிலில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டதா?
தமிழிசைக்கு அனுமதி, செல்வப்பெருந்தகைக்கு மறுப்பு? காஞ்சி கோவிலில் தீண்டாமை

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு நிகழ்வில் என்னை அனுமதிக்காததற்கு சாதிய ஒடுக்குமுறையே காரணம். அதை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது" என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், "கோவிலுக்குள் சாதிரீதியாக எந்தப் பாகுபாடும் காட்டப்படவில்லை" எனக் கூறுகிறார், காஞ்சிபுரம் அறநிலையத்துறை இணை ஆணையர்.

கோவில் குடமுழுக்கு நிகழ்வில் என்ன நடந்தது? சர்ச்சையின் பின்னணி என்ன?

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இது 'சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்' என அறநிலையத் துறையின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

இங்கு 2008ஆம் ஆண்டு கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. அதன் பிறகு சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூலை 7ஆம் தேதி கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவில் நடந்தது என்ன?

விழாவில் பங்கேற்பதற்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான செல்வப்பெருந்தகை அழைக்கப்பட்டிருந்தார். தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசையும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். குடமுழுக்கு முடிந்த பிறகு மூலவர் விமானத்தில் நீராட்டு நிகழ்வு நடைபெறுவதாக இருந்தது. இதற்காக கோபுரத்தின் மேல் ஏறுவதற்கு தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

செய்தியாளர்களிடம் இதுதொடர்பாகப் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, கோபுரக் கலசம் இருக்கும் பகுதிக்குத் தன்னை ஏற்றாமல் சாதிரீதியாகப் பாகுபாடு காட்டப்பட்டதாக விமர்சித்தார்.

மேலும்,, "இந்தப் பிரச்னை 2,000 ஆண்டுளாக நிலவுகிறது. அதை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது," எனவும் குறிப்பிட்டார்.

அதோடு, "அறநிலையத்துறை அதிகாரிகள் மிகவும் மெத்தனப் போக்கை கடைபிடித்துள்ளனர். யார் யாரைக் கட்டுப்படுத்துவது எனத் தெரியவில்லை. அரசு மற்றும் அறநிலையத்துறையின் நற்பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதால் மக்களோடு மக்களாக நின்று குடமுழுக்கைப் பார்த்தேன்," என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

மேற்கண்ட நிகழ்வைத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், 'வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "செல்வப்பெருந்தகையை சாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தினார்களா? அதற்குக் காரணமான அதிகாரிகள் யார் என்பதை அறிவதற்கு முதலமைச்சர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என அவர் கூறியுள்ளார். அறநிலையத்துறை அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது எக்ஸ் பக்கத்தில் ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

"இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் தொடரும் வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிப்பதற்கு உறுதியான நடவடிக்கை தேவை" என்கிறார், ரவிக்குமார் எம்.பி.

செல்வப்பெருந்தகையின் பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "அண்ணா நகர், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்களுடன் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசையும் விழாவில் கலந்து கொண்டார்" என அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

குடமுழுக்கு நிகழ்வுக்கு செல்வப்பெருந்தகை தாமதமாகச் சென்றதாகக் கூறிய நாராயணன் திருப்பதி, "அனைவரோடும் மூலவர் விமான கலசத்துக்கு அருகில் அவரை நிற்க வைத்த நிலையிலும் உண்மைக்கு மாறான தகவலைப் பேசியிருக்கிறார். மூலவர் அர்ச்சனையின்போது அவருக்காக அனைவரும் காத்திருந்தபோதும் அவர் பங்கேற்காமல் வெளியேறிவிட்டார்," என்றார்.

செய்தியாளர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அளித்துள்ள பதிலில், "செல்வப்பெருந்தகையிடம் பேசினேன். கோபுரத்திற்கு தமிழிசை சற்று முன்பே சென்றுவிட்டார். தாமதமாக வந்ததால் கீழே உள்ளவர்கள் அவரை நிறுத்தியுள்ளனர். பின்னர் அவரும் மேலே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்" எனக் கூறினார்.

இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பாகுபாடு நீடிப்பதாக செல்வப்பெருந்தகை கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "தி.மு.க ஆட்சி வந்த பிறகுதான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வழிசெய்யும் திட்டத்தைச் செயல்படுத்தினோம். கவனக்குறைவால் ஏற்படும் பிரச்னைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம்" எனத் தெரிவித்தார்.