ரஷ்யாவில் புதின் பதவி நீக்கிய அமைச்சர் மர்ம மரணம் - என்ன நடந்தது? முழு பின்னணி

ரஷ்யாவின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோய்ட் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. ஸ்டாரோவோய்ட்டை அதிபர் விளாடிமிர் புதின் திங்கள்கிழமை பதவி நீக்கம் செய்திருந்தார்.
அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டதற்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. அதன் பின் சற்று நேரத்தில் போக்குவரத்து துணை அமைச்சர் ஆண்ட்ரேய் நிக்கிடின் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
தற்போது இந்த சம்பவத்திற்கான காரணங்களை கண்டறிய முயற்சிப்பதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
ஸ்டாரோவோய்ட் இறப்பு பற்றிய அறிவிப்புக்கு முன், ரஷ்ய செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவிடம் செய்தியாளர்கள் ஸ்டாரோவோய்ட் பற்றி கேள்வி எழுப்பினர்.
குர்ஸ்கில் நடைபெற்ற சம்பவங்களால் ஸ்டாரோவோய்ட் மீது அதிபர் புதின் நம்பிக்கை இழந்துவிட்டாரா? என்பதுதான் கேள்வி.
ஸ்டாரோவோய்ட் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் உயிரிழந்திருக்கலாம் என விசாரணை முகமையுடன் தொடர்புடைய வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஃபோர்ப்ஸ் பதிப்பகம் எழுதியுள்ளது.
ஸ்டாரோவோய்ட் "நீண்ட காலத்திற்கு முன்னரே" உயிரிழந்துவிட்டதாக ஸ்டேட் டூமாவின் (ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழவை) பாதுகாப்பு குழுவின் தலைவர் ஆண்ட்ரேய் கார்டபோலோவ் ரஷ்ய ஊடகமான ஆர்.டி.வி.ஐ. யிடம் தெரிவித்தார்.
ஆனால் ஸ்டாரோவோய்ட் திங்கள்கிழமை தனது காருக்கு அருகே சில மீட்டர் தொலைவில் இருந்த புதருக்கு பின்னால் உயிரிழந்து கிடந்ததாக ஆர்.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட ஒடிண்ட்சோவோ வாகன நிறுத்துமிடத்தில் விசாரணை குழுவினர் வேலை செய்துகொண்டிருக்கும் புகைப்படங்களும், காணொளியும் வெளியாகியுள்ளன.