சூனியம் வைத்ததாகக் கூறி 5 பேர் உயிரோடு எரித்துக் கொலை - பிகாரில் நடந்த பதற வைக்கும் சம்பவம்

பிகாரின் பூர்னியா மாவட்டத்தில் உள்ள டெட்காமா கிராமத்தில் ஒரே குடும்பத்தை ஐந்து பேர் சூனியக்காரர்கள் என குற்றம்சாட்டப்பட்டு கொல்லப்பட்டதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூர்னியா காவல்துறையின் கூற்றின்படி, உயிரிழந்தவர்களில் பாபுலால் ஓரான் அவரது மனைவி உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஜூலை 6ஆம் தேதி ஞாயிறன்று நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றம்சாட்டப்பட்டவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூர்னியா மாவட்ட ஆட்சியர் அன்சுல் குமார் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பூர்னியாவை சேர்ந்த சுயேட்சை எம்பி பப்பு யாதவ் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தேஜஸ்வி யாதவ் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, "ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரோடு எரிக்கப்பட்டுள்ளனர்." என எழுதியுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பூர்னியா மாவட்ட ஆட்சியர் அன்சுல் குமார் தெரிவித்துள்ளார்.
"இந்த சம்பவம் ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது. இரவு சுமார் 2 மணியளவில் ஐந்து பேர் தாக்கப்பட்டனர். அடித்து உதைத்தபின்னர் அவர்கள் எரிக்கப்பட்டதாக தெரிகிறது. திங்கட்கிழமை காவல்துறையும், நிர்வாகமும் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பியது" என அவர் தெரிவித்தார்.
"முதல் தகவல் அறிக்கையில் 23 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 150 முதல் 200 அடையாளம் காணப்படாதவர்கள் மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் முக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பல இடங்களில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை ஒரு சிறார் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்."
கிராமத்தில் தற்போதைய நிலை குறித்த தகவலையும் அன்சுல் குமார் தெரிவித்தார். "டெட்காமாவை சேர்ந்த பலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய காவல்துறை தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருகிறது," என அவர் தெரிவித்தார்