அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகள்': பிரிக்ஸ் நாடுகளை எச்சரித்த டிரம்ப்

அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகள்': பிரிக்ஸ் நாடுகளை எச்சரித்த டிரம்ப்
பிரிக்ஸ் நாடுகள் 'அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளில்' இருந்து விலகியிருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடந்து முடிந்துள்ளது. ஆனால் அது இப்போது அதிகம் விவாதிக்கப்படுவதற்குக் காரணம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

உலகின் வேகமாக வளர்ந்து வரும் 10 பொருளாதார சக்திகளின் அமைப்பான பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்று. ரியோ டி ஜெனிரோவில் சமீபத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து டொனால்ட் டிரம்பின் எதிர்வினை வந்தது.

'பிரிக்ஸ்'-இன் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் இணைந்து செயல்படும் நாடுகளுக்கு அவர் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா, அமெரிக்கா இடையே ஒரு 'மினி வர்த்தக ஒப்பந்தம்' (Mini Trade deal) சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில் அமெரிக்க அதிபர் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார். ஜூலை 7, திங்கள்கிழமை (அமெரிக்க நேரப்படி) பல நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்திருந்தார்.

பிரிக்ஸ் அமைப்புக்கு டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலின் அர்த்தம் என்ன என்ற கேள்வி இப்போது எழுகிறது. அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தமும் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால், பிரிக்ஸ் அமைப்பின் ஒரு நிறுவன உறுப்பினராக, உள்ள இந்தியா.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில், 'பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் எந்தவொரு நாடும் கூடுதலாக 10 சதவிகித வரியை எதிர்கொள்ள நேரிடும். இந்தக் கொள்கையில் எந்த விலக்கும் இருக்காது' என்று பதிவிட்டுள்ளார்.

பிரிக்ஸ் ரியோ பிரகடனத்திற்குப் பிறகு டிரம்ப் இதைப் பதிவிட்டதாக நம்பப்படுகிறது. பிரிக்ஸ் 17வது உச்சிமாநாடு ஜூலை 6-7 தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருள் 'பன்முகத்தன்மை மற்றும் நிலையான நிர்வாகத்திற்கான உலகளாவிய தெற்கு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்' என்பதாகும்.

ரியோ பிரகடனம் 'உலகளாவிய நிர்வாகத்தை மேம்படுத்துதல்' மற்றும் 'சர்வதேச ஸ்திரத்தன்மை' பற்றிப் பேசுகிறது. இதனுடன், ஒருதலைப்பட்ச வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகள் போன்ற பிரச்னைகளும் விவாதிக்கப்பட்டுள்ளன.

பிரகடனத்தின் இந்த விஷயத்தை குறிப்பிட்டே, டொனால்ட் டிரம்ப் வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தினார் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், பிரகடனத்தில் அமெரிக்காவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

'வர்த்தகத்தின் போக்கைச் சிதைத்து, உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிமுறைகளை மீறும் ஒருதலைப்பட்ச வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளின் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து பிரிக்ஸ் நாடுகள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதாக' ரியோ பிரகடனம் கூறுகிறது.

இது தவிர, ஒருதலைபட்சமான பொருளாதாரத் தடைகள் மற்றும் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவது தீங்கு விளைவிக்கும் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என பிரகடனம் கூறுகிறது.

இந்தப் பிரகடனம், உலக வர்த்தக அமைப்பினுடைய விதிகளின்படி வர்த்தகத்தை ஆதரிக்கிறது மற்றும் பலதரப்பு வர்த்தக அமைப்பைப் பற்றி வலியுறுத்துகிறது.