அ.தி.மு.க.,வில் 23; தி.மு.க.,வில் 14 விஜயகாந்த் ராசி வேலைக்காகுமா?

அ.தி.மு.க.,வில் 23; தி.மு.க.,வில் 14 விஜயகாந்த் ராசி வேலைக்காகுமா?
: 'அ.தி.மு.க., கூட்டணியில் 23 சீட், தி.மு.க., கூட்டணியில் 14 சீட் கேட்டு, இரண்டு பக்கமும் கதவை திறந்து வைத்து, தே.மு.தி.க., காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள, தி.மு.க., தலைமை பணிகளை முடுக்கி விட்டு உள்ளது.

கூட்டணிக்குள் புது வரவாக, தே.மு.தி.க., மற்றும் பா..ம.க.,வை இழுக்க ரகசிய பேச்சு நடந்து வருகிறது.

தி.மு.க., கூட்டணியில் இணைய வேண்டும் என்றால், 14 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் உறுதிப்படுத்த வேண்டும் என தே.மு.தி.க., நிபந்தனை விதித்துள்ளது.

இதேபோல், அ.தி.மு.க., கூட்டணியில் இணைய வேண்டும் என்றால், 23 சட்டசபை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் தர வேண்டும் என, தே.மு.தி.க., பிடிவாதம் பிடிக்கிறது.

தற்போதைய நிலையில், இரண்டு கூட்டணிக்கும் கதவை திறந்து வைத்து, தே.மு.தி.க., காத்திருக்கிறது.

அதேநேரம் கூட்டணி அறிவிப்பை, ஜனவரி 9ல் கடலுாரில் நடக்கும் மாநாட்டில்தான் வெளியிடுவோம் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், தே.மு.தி.க., வந்தால் பார்ப்போம் என்ற மனநிலையில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தலைமைகள் உள்ளன.

இதுகுறித்து தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:

தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்திற்கு ராசி எண் ஐந்து. அதனால், பல தேர்தல்களில் கூட்டுத்தொகை ஐந்து வரும்படி, தொகுதிகளை பெற்று போட்டியிட்டார்.

தே.மு.தி.க., முதல்முறையாக அ.தி.மு.க.,வுடன், 2011 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது அக்கட்சிக்கு 41 சீட்கள் ஒதுக்கப்பட்டன.

இதை தொடர்ந்து, 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து 14 தொகுதிகளில் தே.மு.தி.க., போட்டியிட்டது.

அதேபோல், கூட்டுத்தொகை ஐந்து வரும்படி தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விடம் கேட்கப்பட்டுள்ளது.

தி.மு.க., தரப்பில் கூட்டுத்தொகை கணக்கெல்லாம் இல்லாமல், நேரடியாக ஐந்து சீட் தருகிறோம் எனக் கூறியுள்ளனர்.

அ.தி.மு.க., கூட்டணியில் சீட் எவ்வளவு என்பதை சொல்லாமல், கூட்டணிக்கு அழைக்கின்றனர். இதனால், எந்த முடிவும் எடுக்காமல் கட்சி தலைமை காத்திருக்கிறது.

இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.