இரு குழந்தைகளையும் இழந்து விட்டேன்" - கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த தந்தை வேதனை

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளது. மோதிய வேகத்தில் அந்த வேனை சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு ரயில் இழுத்துச் சென்றுள்ளது. இந்த விபத்தில் பள்ளி வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது.
வேனில் இருந்த 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்திருந்த நிலையில், மேலும் ஒரு மாணவர் பலியாகியுள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் என்ற மாணவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக, விதிகளை மீறியதாக கேட் கீப்பரை ரயில்வே பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இரு குழந்தைகளையும் இழந்த பெற்றோர் கூறுவது என்ன?
கடலூர் ரயில் விபத்தில் தமது இரு பிள்ளைகள் உயிரிழப்பிற்கு ரயில்வே நிர்வாகமே காரணம் என்று உயிரிழந்த சாருமதி, செழியனின் தந்தை செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
இந்த விபத்தில், சின்னகாட்டு சாகை சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த திராவிடமணி - கலைச்செல்வி தம்பதியின் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மகள் சாருமதி (16), பதினொன்றாம் வகுப்பு பயிலும் மகன் செழியன்(15) மற்றும் மாணவர் விமலேஷ்(10) ஆகியோர் உயிரிழந்தனர்.
விபத்து நடந்தபோது, திராவிடமணி - கலைச்செல்வி தம்பதியின் மகள் சாருமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர்களது மகன் செழியன் படுகாயங்களுடன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், அவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ரயில் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தனது பிள்ளைகளின் உயிரிழப்புக்கு ரயில்வே நிர்வாகமே முழு காரணம் என்றும், கேட் கீப்பரின் அஜாக்கிரதையால்தான் விபத்து நடந்ததாகவும், இந்த விபத்திற்குக் காரணமானவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தனது இரண்டு பிள்ளைகளைப் பறிகொடுத்த திராவிட மணி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
திராவிட மணியின் உறவினரான ஆறுமுகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ரயில்வே துறையின் அஜாக்கிரதையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு முழு பொறுப்பு ரயில்வே நிர்வாகம்தான். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகளை இழந்துள்ளார்கள். நினைக்கும்போது மனம் கனக்கிறது. இனி வரும் காலங்களில் இப்படியொன்று நடக்கக்கூடாது. அதற்காகவேனும் அரசு நேர்மையாக விசாரணை செய்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்," என்று கூறினார்.