மத்திய அரசின் இந்த 5 சூப்பர் திட்டங்கள்... விவசாயிகளுக்கு பெரிய நிம்மதி - என்னென்ன பாருங்க!

Schemes For Agriculture And Farmers: நாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான் என தேசப்பிதா மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற வாசகம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் தற்காலத்தில் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் எக்கச்சக்க தடைகளும், இடையூறுகளும், பிரச்னைகளும் இருந்து ஏற்பட்டு வருகின்றன.
விவசாயத்துறையை மட்டும் நம்பி நம் நாட்டின் மக்கள்தொகையில் 42.3% பேர் வாழ்க்கை நடத்துகின்றனர். நமது உள்நாட்டு உற்பத்தியில் 18.2% விவசாயம் பங்களிக்கிறது. இருப்பினும், பரந்துபட்ட நோக்கில் விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பது மிக முக்கியமாக இருக்கிறது. அதிலும் அரசாங்கத்தின் பங்கு அதிகமிருக்கிறது. எனவே அரசும் விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து அதை செயல்படுத்தியும் வருகின்றன.
Agricultural Schemes: மத்திய அரசின் 5 விவசாயத் திட்டங்கள்:
ஆனால், இதில் இருக்கும் பெரிய சிக்கல் என்னவென்றால் அரசாங்கத்தின் இந்த திட்டங்கள் பெரிதும் விவசாயிகளுக்கு தெரிவதில்லை, அதுகுறித்த விழிப்புணர்வும் குறைவாக இருக்கிறது. பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டம் பலருக்கும் தெரிந்துள்ள நிலையில், இந்த 5 விவசாயத் திட்டங்கள் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. அந்த வகையில், விவசாயிகளின் வருமானத்தை அதிகிப்படுத்தவும், விவசாயத்தை நவீனமாக்கவும், விவசாயிகளுக்கு சமூக பாதுகாப்பு வழங்கவும் அரசால் செயல்படுத்தப்படும் 5 விவசாயத் திட்டங்களை இங்கு ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
Agricultural Scheme: பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் (PMFBY)
மத்திய அரசால் இந்த திட்டம் கடந்த 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இயற்கை பேரிடர், பூச்சிகள் மற்றும் நோய்கள் மூலம் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்திற்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதை இத்திட்டம் உறுதிசெய்யும். குறைந்த அளவில் விவசாயிகள் இதில் பிரீமிம் செலுத்தினாலே போதுமானது, பதிலுக்கு பயிர்கள் சேதமடைந்தால் அவர்களின் ஒட்டுமொத்த பயிர்களுக்கும் இழப்பீட்டை பெறுவார்கள். இதில் 50க்கும் மேற்பட்ட பயிர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இத்திட்டம் பல்வேறு வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது...
Agricultural Scheme: பிரதமர் வேளாண் நீர் பாசன திட்டம் (PMKSY)
பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சயீ யோஜனா என்ற இந்த நீர் பாசன திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டில் தொடங்கியது. அனைத்து விவசாயிகளுக்கும் தண்ணீர் கிடைப்பதை இத்திட்டம் உறுதிசெய்யும். குறிப்பாக, விவசாய நிலங்களுக்கு நீர் பாசன வசதியை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதற்கு தேவையான நீர் வளத்தை பெருக்குவது, நீர் மேலாண்மையை மேற்கொள்வது ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படும். இந்த திட்டத்தில் குளம் வெட்டுதல், கால்வாய்களை தூர்வாரி சீரமைப்பு செய்தல், சொட்டு நீர் பாசனம், மைக்ரோ ஸ்பிரிங்க்லர் நீர்ப்பாசனம் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும். மேலும் இத்திட்டம் மழையை பெரிதும் நம்பியிருக்கும் விவசாயிகளுக்கும், மற்ற நீர்ப்பாசன வழிகள் இல்லாமல் தவிக்கும் விவசாயிகளுக்குமானது.
Agricultural Scheme: பிரதமர் கிசான் மந்தன் யோஜனா (PMKMY)
18 முதல் 40 வயதான சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்காக தொடங்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் சிறு தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். விவசாயிகள் செய்யும் அதே தொகையை கூடுதலாக அரசும் அவர்களின் கணக்கில் டெபாசிட் செய்யும். இதன்பின்னர் அந்த விவசாயிக்கு 60 வயதானதும், அவருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்படும். வயதான காலத்தில் நிலையான வருமானம் இல்லாத விவசாயிகளுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Agricultural Scheme: கிருஷி உடான் திட்டம்
மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் இத்திட்டம் தொடங்கப்பட்டது. விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருள்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் சந்தைப்படுத்துவதற்கு உதவிடுவதே இத்திட்டத்தின் நோக்கம். குறிப்பாக, நாட்டின் வடகிழக்கு பிரதேசங்களில், மலைப் பிரதேசங்களில், பழங்குடி பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ், பூக்கள், விலங்குகள் சார்ந்த பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணழுகள், பழங்கள் மற்றும் மீன்கள் ஆகியவை நாடு முழுவதும் உள்ள 58 விமான நிலையங்களின் மூலம் சந்தைக்கு கொண்டுச்செல்லப்படும். வேகமாக சந்தைப்படுத்துதல் மூலம் விவசாயிகளுக்கு நல்ல லாபமும் கிடைக்கும், இழப்பும் குறையும்.
Agricultural Scheme: பிரதமர் தன் தன்யா கிருஷி யோஜனா
மத்திய அரசு இத்திட்டத்திற்கு கடந்த ஜூலை 16ஆம் தேதிதான் ஒப்புதல் அளித்தது. விவசாய தயாரிப்புகள் மற்றும் பிற விஷயங்களில் பின்தங்கியிருக்கும் நாட்டின் 100 மாவட்டங்களை தேர்வு செய்து அவற்றில் இத்திட்டம் கவனம் செலுத்தும். இந்த மாவட்டங்களில் நிதி சார்ந்த உதவிகள் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் விவசாயம் பலப்படுத்தப்படும். இங்குள்ள விவசாயிகளுக்கு நல்ல விதைகள், விவசாயம் மேற்கொள்வதற்கான பயிற்சிகள், பிற பயிர்கள் குறித்த அறிமுகம், கடன் வசதி உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். நாட்டின் பல பகுதிகளில் விவசாயம் நலிவடைந்து வரும் சூழலில், அந்த இடங்களில் விவசாயத்திற்கு புத்துயிர் ஊட்டும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது...