வலையில் சிக்கியதும் மீனவரை கடலுக்குள் இழுத்துச் சென்ற மீன் - ஆந்திராவில் என்ன நடந்தது?

வலையில் சிக்கியதும் மீனவரை கடலுக்குள் இழுத்துச் சென்ற மீன் - ஆந்திராவில் என்ன நடந்தது?
கொம்மு கோனாம் மீனால் இழுத்துச் செல்லப்பட்ட சோடுபில்லி யேரய்யா

ஆந்திர பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவரை மீன் ஒன்று கடலுக்குள் இழுத்துச் சென்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'கொம்மு கோனாம்' என்று அழைக்கப்படும் அந்த மீன் வலையில் சிக்கியிருந்தது. வலையை மீனவர்கள் இழுக்கும் போது, அந்த மீன் மிகுந்த வேகத்துடன் வலையை இழுத்து அந்த மீனவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது, என்று கூறுகிறார் யல்லாஜி. கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நபருடன் சென்ற யல்லாஜி, அதனை நேரில் கண்டதாக கூறினார்.

ஜூலை 2-ம் தேதி அன்று காலை சோடுபில்லி யேரய்யா மீன்பிடிக்க சென்றார். புதிமடகா கடற்கரையில் இருந்து 25 கி.மீ கடலுக்குள் சென்று மீன் பிடித்த போது அவரை மீன் இழுத்துச் சென்றது. கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் மூலம் அவரை தேடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

"புதன்கிழமை காலை மீன் பிடித்துவிட்டு புதிமடகா கடற்கரைக்கு மீனவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வலையில் கொம்மு கோனாம் என்ற மீன் சிக்கியது. அந்த மீனை தாங்கும் அளவுக்கு அந்த வலை வலுவானதாக இல்லை. எனவே யேரய்யா மற்றொரு வலையை வீசி அந்த மீனை வலைக்குள் இழுக்க முயன்றார். ஆனால் கொம்மு கோனாம் மீன் யேரய்யாவை வேகமாக கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. அதன் பின்னர் யேரய்யா என்ன ஆனார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை,.

அன்று என்ன நடந்தது?

சோடுபில்லி யேரய்யா, அவருடைய சகோதரர் சோடுபில்லி கொரலய்யா, வாசுபள்ளி யல்லாஜி மற்றும் கனகல்ல அப்பலராஜூ ஆகிய நான்கு மீனவர்கள் புதிமடகா கிராமத்தில் இருந்து புதன்கிழமை காலை அதிகாலை 2 மணிக்கு மீன்பிடிக்க சென்றனர். அந்த கிராமம் ஆந்திராவின் அச்சுதபுரம் பகுதியில் அமைந்துள்ளது.

கடற்கரையில் இருந்து 25 கி.மீ தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்கள், காலை 9 மணியளவில் வலையை எடுக்க முயன்றுள்ளனர். அப்போது அதில் ஏதோ பெரிதாக சிக்கியிருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.

"நாங்கள் அங்கிருந்து கிளம்பிக் கொண்டிருந்த போது, 200 கிலோ கிராம் எடை கொண்ட கொம்மு கோனாம் மீன் அதில் சிக்கியிருந்தது. ஆனால் வலை போதுமான அளவுக்கு வலுவாக இல்லை. எனவே யேரய்யா மற்றொரு கயிற்றுடன் தூண்டில் அமைத்து அந்த மீனை இழுக்க முயன்றார். ஆனால் அந்த மீன் யேரய்யாவை வேகமாக கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. நாங்கள் அங்கே அரை மணி நேரத்திற்கும் மேலாக தேடினோம். ஆனால் கிடைக்கவில்லை," என்று யல்லாஜி  தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய அவருடைய தம்பி கொர்லய்யா, "என் கண் முன்னே என்னுடைய அண்ணன் கடலுக்குள் விழுந்துவிட்டான். அவனுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை," என்று அவர் கூறினார்.

"அவருடைய அண்ணனுக்கு நிகழ்ந்ததை நேரில் பார்த்து கொரலய்யா ஆடிப் போய்விட்டார். எங்களால் நீண்ட நேரம் அங்கே இருக்க இயலவில்லை. கொம்மு கோனாம் மீன் படகில் இருப்பவர்களுக்கும் அச்சுறுத்தலாக மாறும் என்பதால் நாங்கள் அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தோம். நாங்கள் திரும்பி வந்த பிறகு கிராம மக்களிடம் தெரிவித்தோம். அவர்களும் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தினார்கள். அன்று மாலை வரை நாங்கள் தேடினோம். ஆனால் அனைத்தும் வீணாகிவிட்டது," என்று யல்லாஜி தெரிவித்தார்

தொடரும் தேடுதல் பணி

புதிமடகா கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் யேரய்யாவை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சிலர் படகுகளில் சென்று கரையோரங்களில் தேடி வருகின்றனர். சிலர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்று அவரை தேடி வருகின்றனர்.

அண்டை மீனவ கிராமங்களில் இருந்தும் மீனவர்கள் யேரய்யாவின் வீட்டிற்கு வந்து தங்களின் ஆறுதலை தெரிவிப்பதோடு உதவியையும் செய்து வருகின்றனர்.

"என் வீட்டின் முதுகெலும்பு என் மூத்த மகன். கொரலய்யா இளைய மகன். எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இப்போது நான் என்ன செய்து அவர்களை காப்பாற்றுவேன்?" என்று அவரின் தாயார் கோடந்தம்மா அழுதபடி கேள்வி கேட்கிறார்..