சிந்து நதி நீர்! "ஒரு சொட்டு நீரை கூட தர முடியாது" ஹரியானா விவகாரத்தில் பஞ்சாப் முதல்வர் திட்டவட்டம்

சிந்து நதி நீர்! "ஒரு சொட்டு நீரை கூட தர முடியாது" ஹரியானா விவகாரத்தில் பஞ்சாப் முதல்வர் திட்டவட்டம்
சிந்து நதி நீர்! "ஒரு சொட்டு நீரை கூட தர முடியாது" ஹரியானா

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. மேலும், சிந்து நதி நீரை இந்தியாவிற்குள்ளேயே பயன்படுத்துவது குறித்தும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்தச் சூழலில் பஞ்சாப் ஹரியானா இடையே தண்ணீர் பகிர்வில் உள்ள சிக்கல் நடந்த பேச்சுவார்த்தையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் கான் கூறிய கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இதன் மூலம் இத்தனை காலம் பாகிஸ்தானுக்குச் சென்ற சிந்து நதி நீரை நாம் திறம்படப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. சிந்து நதி நீரை இந்தியிலேயே சரியாகப் பயன்படுத்த மத்திய அரசு இப்போது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.

ஆனால், சிந்து நதி நீர் விவகாரத்தில் இந்தியாவிலேயே பல வட மாநிலங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகளும் மோதலும் இருக்கிறது. இதற்கிடையே பஞ்சாப்பின் நீர்த் தேவைகளை நிறைவேற்றச் சிந்து நதி நீர் நீரை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் பகவந்த் மான் புதன்கிழமை தெரிவித்தார். சட்லஜ்-யமுனா இணைப்பு (எஸ்.ஒய்.எல்) பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் ஹரியானா முதல்வர் நயப் சைனியுடன் ஆலோசனை நடத்திய போது அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் இருந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இதன் மூலம் இனி சிந்து, ஜீலம், செனாப் ஆகியவற்றின் தண்ணீரை இந்தியாவிற்குள்ளேயே தேவையான அளவு பயன்படுத்த முடியும் என்று பகவந்த் மான் கூறினார்.

பஞ்சாப்பில் நிலத்தடி நீர் குறைந்து வரும் நிலையில், வரும் காலத்தில் நீரை வேறு இடத்திற்குத் திசை திருப்பும்போது பஞ்சாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பகவந்த் மான் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், "ஹரியானாவும், பஞ்சாப்பும் சகோதரர்கள். ஆகவே இந்தச் சண்டை முடிவுக்கு வர வேண்டும். இது நாள் வரை இந்த விஷயத்தில் அரசியல் நடந்து வருகிறது. இரண்டு மாநிலங்களும் 2 எம்.எஃப் தண்ணீருக்காகச் சண்டையிட்டு வருகின்றன. காஷ்மீரிலிருந்து கால்வாய் வந்தால், எங்களுக்கு 23 எம்.எஃப் தண்ணீர் கிடைக்கும்" என்றார்.

மத்திய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பஞ்சாப்பிடம் மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்து கொள்ள உபரி நீர் எதுவும் இல்லை என்றும் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட யாருக்கும் பகிர்ந்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்றும் பகவந்த் மான் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எஸ்.ஒய்.எல் கால்வாய் என்பது உணர்ச்சிகரமான பிரச்சனை என்றும், இதனால் பஞ்சாப்பில் கடுமையான சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள் ஏற்படும் என்றும், இது ஹரியானா மற்றும் ராஜஸ்தானையும் பாதிக்கும் ஒரு தேசியப் பிரச்சனையாக மாறும் என்றும் முதல்வர் கூறினார். இருப்பினும், இந்தப் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என்று சைனி நம்பிக்கை தெரிவித்தார். அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.

1966ஆம் ஆண்டில் பஞ்சாப்பிலிருந்து ஹரியானா பிரிக்கப்பட்ட பின்னர் 1981ஆம் ஆண்டு தண்ணீர் பகிர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. நீரைத் திறம்பட ஒதுக்கீடு செய்ய எஸ்.ஒய்.எல் கால்வாய் இணைப்பு உருவாக்கப்பட்டது. 214 கி.மீ நீளமுள்ள எஸ்.ஒய்.எல் கால்வாயில் 122 கி.மீ பஞ்சாப்பிலும், 92 கி.மீ ஹரியானாவிலும் கட்ட திட்டமிடப்பட்டது.

ஆனால், 2004ம் ஆண்டு அப்போது பஞ்சாப்பில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, திடீரென 1981ஆம் ஆண்டு ஒப்பந்தம் மட்டுமின்றி, ரவி மற்றும் பியாஸ் நதிகளின் நீரைப் பகிர்வு உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்தது. இதை எதிர்த்து ஹரியானா தாக்கல் செய்த வழக்கில், பஞ்சாப் அரசு நீர் பங்கீடு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்றே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது