தங்கத்தை விட்டு தள்ளுங்க.. ஒரு கோடி ரூபாயை எட்டி பிடிக்கும் பிட்காயின்.. காரணங்கள் என்ன?

தங்கத்தை விட்டு தள்ளுங்க.. ஒரு கோடி ரூபாயை எட்டி பிடிக்கும் பிட்காயின்.. காரணங்கள் என்ன?
கோடி ரூபாயை எட்டி பிடிக்கும் பிட்காயின்.. காரணங்கள் என்ன?

வாஷிங்டன்: கடந்த சில மாதங்களாக ஒரு பக்கம் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வந்தது. இந்தச் சூழலில் சைலெண்டாக இப்போது பிட்காயின் உச்சத்திற்குப் போய் இருக்கிறது. பிட்காயின் இப்போது கிட்டதட்ட ஒரு கோடியை நெருங்கிவிட்டது. இந்தளவுக்கு பிட்காயின் தாறுமாறாக உயர என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.

இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. டிரம்ப், மத்தியக் கிழக்கு பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. இப்போது சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.9000க்கு மேல் தான் இருந்து வருகிறது. புவிசார் பதற்றம், பொருளாதாரக் குழப்பங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது.

ரூ.1 கோடியை நெருங்கும் பிட்காயின்

அதேநேரம் மறுபுறம் கடந்த சில நாட்களாக பிட்காயின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இப்போது ஒரு பிட்காயின் கிட்டத்தட்ட ஒரு கோடியை நெருங்கிவிட்டது. இப்போது இந்தியாவில் சுமார் ரூ.95 லட்சத்திற்கு பிட்காயின் வர்த்தகமாகி வருகிறது. இன்னும் சற்று அதிகரித்தால் அதன் மதிப்பு ஒரு கோடியைத் தாண்டிவிடும். பிட்காயின் திடீரென இந்தளவுக்கு உயரச் சில முக்கிய காரணங்கள் உள்ளன

.காரணங்கள் என்ன

முதலில் பெரு நிறுவனங்களின் ஆதரவும், ETF முதலீடுகளும் தான் பிரதானக் காரணம். ஜூலை 3ஆம் தேதி நிலவரப்படி, பிட்காயின் ETF முதலீடுகள் ஆண்டுக்கு 14.4 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. 66 ஸ்பாட் ETFகள் 138 பில்லியன் டாலருக்கும் அதிகமான க்ரிப்டோ சொத்துகளை நிர்வகித்து வருகின்றன. பிளாக்ராக் என்ற இடிஎஃப் மட்டும் 65 பில்லியன் டாலருக்கும் அதிகமான பிட்காயின்களை வைத்திருக்கிறது. இது தவிரப் பல்வேறு நிறுவனங்களும் பிட்காயின் இருப்புகளை 31% அதிகரித்து 349 பில்லியன் டாலர்களாக உயர்த்தியுள்ளன.

டிரம்பின் முடிவு

அமெரிக்க அதிபரான டிரம்ப் க்ரிப்டோ ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவராகவே அறியப்படுகிறார். அமெரிக்காவில் கிரிப்டோகரன்சிக்கு சாதகமான நடவடிக்கை வரும் என்ற நம்பிக்கையை இது அதிகரிப்பதாக இருக்கிறது. கடந்த மார்ச் 6ஆம் தேதி டிரம்ப் இது தொடர்பான நிர்வாக உத்தரவு ஒன்றில் டிரம்ப் கையெழுத்திட்டார். அதன்படி பிட்காயின்களையும் அமெரிக்கா தனது கையிருப்பாகச் சேர்க்கும். இதில் சில கண்டிஷன்கள் இருந்தாலும் கூட அமெரிக்கா என்ற வல்லரசே பிட்காயின் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருப்பது மக்களிடையே நம்பிக்கையை அதிகரிப்பதாகவே இருக்கிறது

அமெரிக்கா- சீனா வர்த்தக பதற்றங்கள் தணிந்துள்ளதும், அதிகரிக்கும் கடன் காரணமாக அமெரிக்காவை மூடிஸ் தரவிறக்கம் செய்ததும் முக்கிய காரணம். இதனால் பிட்காயினை ஒரு மாற்றுச் சேமிப்பாக மக்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர். அமெரிக்க டாலர் இந்தாண்டு 10% வரை சரிந்துள்ளது. மேலும், டாலருக்கு பதிலாக வேறு கரன்சியை சர்வதேச வர்த்தகத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற குரல்களும் அதிகரிக்கும் நிலையில், இவை முக்கியத்துவம் பெறுகிறது.

அதேபோல பிரபல விமான நிறுவனமான எமிரேட்ஸ் நிறுவனம் க்ரிப்டோ மூலமும் பேமெண்டுகளை பெற முதற்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது முதற்கட்ட ஒப்பந்தம் தான் என்ற போதிலும் இது முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் சில காலத்தில் நீங்கள் க்ரிப்டோ அனுப்பியே விமான டிக்கெட்களை புக் செய்யலாம். இது தொடக்கம் தான் என்றாலும் கிரிப்டோவுக்கு இது மிக பெரிய பூஸ்டாகவே பார்க்கப்படுகிறது.