அம்மா இருசக்கர வாகனம் திட்டம்.. பெண்களுக்கு குட் நியூஸ் சொன்ன இபிஎஸ்

அம்மா இருசக்கர வாகனம் திட்டம்.. பெண்களுக்கு குட் நியூஸ் சொன்ன இபிஎஸ்
பெண்களுக்கு குட் நியூஸ் சொன்ன இபிஎஸ்

கோவை: 2026 இல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அம்மா இருசக்கர வாகனம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். தொழில் துறையினர், உற்பத்தியாளர்கள் கோரிக்கைகள் உட்பட அனைத்து கோரிக்கைகளும் பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் தங்க நகை பூங்கா அமைக்கின்ற கோரிக்கையினை அரசு பரீசிலித்து நடவடிக்கைகள் எடுக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வரும் 2026 ஆம் ஆண்டில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து தனது பிரச்சார சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற தொழில் துறையினர் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு, டேக்ட், தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் அசோசியேஷன், கிரில் தயாரிப்பாளர் நலச்சங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொழில் துறையினர் சந்தித்து வரும் சவால்கள், பிரச்சனைகள் குறித்து தொழில் துறையினர் பேசினர். அந்தப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். விமான நிலையத்திற்கு நிலம் தந்தவர்கள் உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, "குறு, சிறு நடுத்தர தொழில் அதிகமாக இருக்கும் பகுதி தமிழகம்.

தொழில் முனைவோர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மின் கட்டண உயர்வால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு எங்களால் முடிந்த நடவடிக்கைகள் எடுக்க முயற்சிப்போம். ஆட்சி அமைந்தவுடன் ஒன்றிய அரசுடன் இணைந்து இராணுவ தளவாடங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலைகள் கொண்டு வரப்படும்.

பஞ்சு தேவை அதிகமாக இருக்கின்றது. நவீன முறையில் பஞ்சு எடுக்க ஆய்வு செய்து இருந்தோம். விமான நிலையம் விரிவாக்கம் செய்ய வேண்டும். சொந்த நிலத்தை விட்டு கொடுப்பது சாதாரண விஷயம் இல்லை. நிலம் எடுக்கும் போது பிரச்சனை வரும். பாதிப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். அவர்களின் மன நிறைவுடன் இடம் எடுக்க வேண்டும் என்று தான் உங்களிடம் இடம் எடுக்கப்பட்டது.

அனைவருக்கும் பொதுவான நபராக விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பது குறித்து கருத்து சொல்ல வேண்டி இருக்கிறது. தொழில் சிறக்க விமான நிலையம் தேவை. நான் முதல்வராக இருந்த போது நிலத்தை எடுக்க உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கைகள் எடுத்தோம். மீண்டும் அதிமுக ஆட்சி வந்தவுடன் ஒன்றிய அரசுடன் இணைந்து விமான நிலைய விரிவாக்கம் செய்யப்படும்.

நீங்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்தை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் செயல்படுத்தப்படும். கிரில் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் உட்பட அனைத்து கோரிக்கைகளும் பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் தங்க நகை பூங்கா அமைக்கின்ற கோரிக்கையினை அரசு பரீசிலித்து நடவடிக்கைகள் எடுக்கும். நிலை கட்டணம் குறைப்பு குறித்து அதிமுக ஆட்சி அமைந்தவுடன் பரிசீலனை செய்வோம்.

பத்திரிகையாளர் நலவாரியத்தில் அனைவரையும் சேர்க்க வேண்டும் என கேட்டு இருக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு தான் செய்தி போட மாட்றீங்க. உண்மை செய்தியை போட்டால் போதும். பொய் செய்தி தேவையில்லை. எங்களுக்கு விளம்பரமே தேவையில்லை.