கிளாம்பாக்கம் பயணிகளுக்கு வந்தாச்சு ஹேப்பி நியூஸ்.. அப்பாடா.. ஒரு வழியா ஆரம்பிச்சிட்டாங்க!

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் மற்றும் அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதற்கான ஆகாய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், வரும் அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் முழுதும் முடிவடைந்து பயணிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என சென்னை பெருநகர் வளர்ச்சி குழும அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வரும் நிலையில், அதனை குறைக்கும் வகையில் பாலங்கள், நடைமேம்பாலங்கள், மேம்பாலங்கள் அமைப்பது என தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தான் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து படிப்படியாக இந்த புதிய பேருந்து நிலையத்தில் வசதிகள் கொண்டு வரப்பட்டன. திருச்சி, நெல்லை, குமரி, சேலம், கோவை உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் சென்னை நகருக்குள்ளும் தனித்தனியாக பஸ்கள் இயக்கப்படுகின்றன.
புறநகர் ரயில் நிலையம்
எனினும் வயதான தம்பதிகள், குழந்தைகள் மற்றும் லக்கேஜ்கள் அதிகமாக கொண்டு வரும் பயணிகள் அங்கிருந்து மற்றொரு பஸ் பிடித்து கோயம்பேடு சென்று பிறகு வீட்டிற்கு செல்வது சிரமமாக இருப்பதாகவும், கிளாம்பாக்கத்தில் இருந்து புறநகர் ரயில்கள் இயக்க வேண்டும் என்றும் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பொதுமக்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இறங்கிய பிறகு, எதிரே எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை - திருச்சி ஜி.எஸ்.டி நெடுஞ்சாலையை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.
இதையடுத்து தான் தற்போது கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில்கள் நின்று செல்லும் வகையில் அங்கு பிளாட்பார்ம், டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. தாம்பரம்- செங்கல்பட்டு மார்க்கத்தில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே இந்த ரயில் நிலையம் அமைந்து வருகிறது. கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் விரைவில் இந்த ரயில் நிலையம்
எனினும், ரயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் செல்வதற்கு ஜி.எஸ்,.டி. சாலையை கடக்க வேண்டும். இதன் காரணமாக பஸ் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. ரூ.74.50 கோடி மதிப்பீட்டில் 275 மீட்டர் நீளமுடைய ஆகாய நடை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகளும் தொடங்கியது.
வரும் அக்டோபர் மாதத்துக்குள்
ஆனால் அதில் நிலம் கையகப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதன்பின்னர் தற்போது நில உரிமையாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஆகாய நடை மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளது. தற்போது இரு புறமும் பெரிய அளவிலான தூண்கள் அமைக்கும் பணிகளானது நடந்து வருகிறது
வயதானவர்கள், குழந்தைகள் படி ஏறி செல்லாமல் லிஃப்டில் செல்லும் வகையில் இருபுறமும் லிஃப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்படுகின்றன. ஆகாய நடைமேம்பாலம் மற்றும் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் கட்டுமான பணிகளும் கூடிய விரைவில் முடிந்துவிடும் என்றும், வரும் அக்டோபர் மாதம் திறக்கப்படும் எனவும் சென்னை பெரு நகர வளர்ச்சி குழும அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.