ஓசூரில் 44,000 பேருக்கு வாடகை வீடு; ரூ.1341 கோடியில் கட்டுகிறது டாடா.

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், வெளிமாநில தொழிலாளர்களுக்காக, 1,341 கோடி ரூபாய் முதலீட்டில், 44,000 பேர் தங்கும் வகையில், வாடகை வீட்டுவசதி திட்டத்தை, டாடா நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
கடந்த, 2020ல் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக, வெளிமாநில தொழிலாளர்கள் தங்குமிடம் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
குறிப்பாக, தங்குமிடம் இல்லாததால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக, தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கட்டுமான துறை, உற்பத்தி துறை நிறுவனங்கள், பணியாளர்கள் இன்றி பாதிக்கும் நிலைஏற்பட்டது.
இதை கருத்தில் வைத்து, இடம் பெயர்ந்து வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்காக, குறைந்த கட்டணத்தில் வாடகை வீட்டுவசதி திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது..
நகர்ப்புற பகுதிகளில், கட்டுமான மற்றும் தொழில் நிறுவனங்கள், இதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டின. இதன் காரணமாக, தொழிற்பேட்டைகள், தொழில் பூங்காக்களுக்கு அருகில், தொழிலாளர்களுக்கான வாடகை வீடுகள் கட்டப்படுகின்றன.
பாதுகாப்பான வாடகை வீடு கிடைக்கும் நிலையில், தொழிலாளர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி, தொடர்ந்து தங்க வாய்ப்பு ஏற்படும். இதனால், தொழில் நிறுவனங்களின் உற்பத்தி சீராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், 'டாடா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்காக, ஏற்கனவே, 10,000 பேர் தங்கும் அளவுக்கு வீட்டு வசதி செய்யப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, 64 ஏக்கர் பரப்பளவில், 44,000 பேர் தங்கும் அளவுக்கு, அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட உள்ளன.
இத்திட்டம், 1,341 கோடி ரூபாய் முதலீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 56 லட்சம் சதுர அடி பரப்பளவுக்கு, குறைந்த கட்டண வாடகை வீடுகள், தொழிலாளர்களுக்காக கட்டப்பட உள்ளன.