திருக்கோவிலூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், குழந்தை உள்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த தேவனூர் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் (44) ஆயுதப்படைக் காவலர்.
இவர் மனைவி மேனகா (22), அதே பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி (70), ராகவேந்திரன் (13), சங்கீதா (36), ஒரு வயது குழந்தை கவுசிகா, சுபா (55), சாந்தி (65), பூமாரி கிராமத்தைச் சேர்ந்த சரிதா (22), அவரது சகோதரர் மோகன் (13) ஆகியோர் நேற்று காரில் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த அத்திப்பாக்கம் அருகே சென்றபோது, திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனலட்சுமி, அவரது பேரன் ராகவேந்திரன், சங்கீதா, சுபா ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்த மற்றவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சாந்தி (65) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக மணலூர்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.