திருத்தணி அருகே 17 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி - அசாம் இளைஞர் கைது

திருவள்ளூர்: திருத்தணி அருகே 17 வயது சிறுமியை வாயைப் பொத்தி தவறாக நடக்க முயற்சித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ், அசாம் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியில் வடமாநில இளைஞர்கள் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 20-க்கும் மேற்பட்டோர், கனகம்மாசத்திரத்தை அடுத்த வி.ஜி.கே.புரம் கிராமத்தில் கொட்டகை அமைத்து தங்கியுள்ளனர்.
இவர்கள் இயற்கை உபாதை கழிக்க, வி.ஜி.கே.புரம் பகுதியில் உள்ள முட்புதர் பகுதிகளுக்கு சென்று வருவது வழக்கம். அதே முட்புதர் பகுதிகளுக்கு வி.ஜி.கே.புரம் பெண்கள் இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டு வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் இக்ராம் (30), இன்று காலை வி.ஜி.கே.புரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி முட்புதர் பகுதிக்கு சென்றபோது, அவரை வாயைப் பொத்தி தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அச்சிறுமி, இக்ராமை தள்ளிவிட்டு, வேகமாக கிராம பகுதிக்கு ஓடி சென்று, சம்பவம் குறித்து பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, வி.ஜி.கே.புரம் கிராம மக்கள் 30-க்கும் மேற்பட்டோர், வடமாநில இளைஞர்கள் தங்கியுள்ள பகுதியினுள் புகுந்து, சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற இக்ராமை தாக்கி, அவரை கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து, அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், முதல் கட்ட விசாரணை நடத்திய கனகம்மாசத்திரம் போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ், இக்ராமை கைது செய்தனர்.