விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் சஸ்பெண்ட்

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேல்குருமலை மலைவாழ் கிராமத்தை சேர்ந்த பழங்குடி விவசாயி மாரிமுத்து (45). கேரள மாநிலம் மறையூரில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த 30-ம் தேதி சின்னாறு வன சோதனைச்சாவடியில் இவரைப் பிடித்துச் சென்ற வனத் துறையினர், உடுமலை வனச் சரக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இந்நிலையில், அங்கு கழிவறையில் தூக்கிட்ட நிலையில் மாரிமுத்து இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக வனத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், வனத் துறையினர் அடித்துக் கொலை செய்து விட்டதாகக் கூறி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், உடுமலை வனத் துறையில் பணியாற்றும் வனவர் நிமல்குமார், வனக்காவலர் செந்தில்குமார் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.