இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீங்க... எடையும் குறையும்

காலையில் தினமும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் சில நாட்களில் கஞ்சி செய்து சாப்பிடுங்கள். கஞ்சியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் சம்பா கோதுமை ரவை கஞ்சி. இந்த வகை கஞ்சி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும்.
அதுவும் இந்த கஞ்சியில் காய்கறிகள் சேர்த்திருப்பதால், இது சத்தானதும் கூட. முக்கியாக காலையில் இந்த கஞ்சியை ஒரு கப் குடித்தால், நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து சுறுசுறுப்பாக இருக்கலாம். அதோடு உடல் எடையிலும் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
உங்களுக்கு சம்பா ரவை கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சம்பா ரவை கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
தேவையான பொருட்கள்:
* கோதுமை சம்பா ரவை - 1 கப்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 4 கப் + தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5-6 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* பீன்ஸ் - 7-8 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 கப்
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் 1 கப் சம்பா கோதுமை ரவையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பை சேர்த்து, இரண்டையும், நீரில் 2 முறை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 4 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, நன்கு மசித்து, கஞ்சி பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும், பொடியாக நறுகிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், தக்காளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து வேக வைத்துள்ள ரவையை சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான சம்பா கோதுமை ரவை கஞ்சி தயார்.