உடல் ஊட்டம் தரும் கோதுமை பால்

உடல் ஊட்டம் தரும் கோதுமை பால்
உடல் ஊட்டம் தரும் கோதுமை பால்

கோதுமையை ஊறவைத்து அரைத்துப் பாலெடுத்து அப்படியே சாப்பிடலாம்.

நாம் உண்ணும் உணவை முறையாகச் செரித்தால் ரத்தத்தில் ஏறும் சர்க்கரை சட்டென்று ஏறாது.

இத்தொடரின் ஆரம்பப் பகுதியில் சொன்னது போல அமெரிக்காவில் இருந்து தான் தமிழகத்திற்குக் கோதுமை அறிமுகமானது. ஒன்றிரண்டாக உடைத்த புழுங்கல் கோதுமையைச் சோறாகவே சமைத்துப் பள்ளி மாணவர்களுக்குப் போடுவார்கள். புழுங்கல் கோதுமை செரிக்கச் சற்றுக் கடினம். ஆனால் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இன்றைப் போல உணவு அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. அதனால் கிடைக்கிற உணவு எதை உண்டாலும் செரித்து விடும். அன்றைக்கு உணவுப் பற்றாக்குறை இருந்தாலும் கிடைக்கிறவை அனைத்துமே சத்துக்கள் மிகுந்ததாக இருந்தன. இன்றோ உணவென்று எது கிடைத்தாலும் உடலுக்கு இழைக்கும் கேடு, குறைந்ததாக இருக்குமா என்றே கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.

அந்தளவிற்கு நம்முடைய நிலம் இரசாயனங்களால் கேடுவிளைவிக்கப்பட்டுள்ளது. பயிரை விளைவிக்கவும், விளைச்சலை பெருக்கவும் நிலத்தில் கொட்டும் உரம் போதாதென்று களைக் கொல்லி, பூச்சிக்கொல்லி என மீண்டும் மீண்டும் இரசாயனத்தெளிப்புகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இதுபோக சமைக்கத் தயார்நிலைக்குப் பொட்டலமிடும் உணவு ஆலைகள் உணவுப் பொருட்கள் கெட்டு விடக்கூடாதென்பதற்காக பூச்சிப் பிடித்து விடக்கூடாதென்பதற்காக சேர்க்கும் ரசாயனப் பொடிகள் ஒருபுறம். உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்கும் குடோன்களில் எலி, பூச்சித் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க வீர்யமிக்க இரசாயன உருண்டைகளை சேமிப்பிடங்களில் வைக்கிறார்கள். இவையும் உணவுத் தானியத்தின் இயல்பான சத்துகளைக் கெடுத்து விடுவதோடு நச்சாகவும் மாற்றி விடும். எனவே முடிந்தளவு முழுத்தானியங்களை அரைத்து ஒன்றிரண்டு நீரில் அலசிக் காயவைத்து நாம் சமைப்பதற்கேற்ற வகையில் உடைத்தோ அரைத்தோ வைத்துக்கொண்டு சமைப்பதே நல்லது.

கோதுமையை ஊறவைத்து அரைத்துப் பாலெடுத்து அப்படியே சாப்பிடலாம். அதையே காய்ச்சினால் கெட்டியாக அல்வா போலத் திரளும். இதனை அப்படியே களிக்கு தொட்டுக் கொள்வதைப் போல கருப்பட்டித் தொட்டு சாப்பிடலாம். கைகால் இணைப்பு மூட்டுக்களில் வறட்சி நிலவுமானால் இந்தக் களி உடனடிப் பலன் கொடுக்கும். சிலருக்கு கால் மடக்கி உட்கார்ந்து எழுந்தாலே சடக்கென்று சத்தம் வரும். நடக்கும்போது மூட்டுக்கள் பலமின்றி துவளும். அப்படிப் பிரச்சனை உள்ளவர்களுக்கு கோதுமைப்பால் களி நல்ல பலத்தைக் கொடுக்கும்

காய்ச்சல் கண்டவர்கள் ஒருவாரம் பத்துநாட்கள் படுத்து எழுந்தால் உடல் முழுதும் வற்றி பலவீனமாகக் காணப்படுவார்கள். சளிக்காய்ச்சலுக்கு எடுக்கும் மருந்துகள் கூட அதீத வெப்பத்தை உடலில் உருவாக்கி சதையை உருக்கி விட்டிருக்கும். அவர்களுக்கும் இந்த கோதுமைப்பால் களி இழந்த சதையை மீட்டு உடலை மினுமினுப்பாக்கும்.

இன்றளவும் கிராமப்புறங்களில் பிள்ளைப் பேறு முடிந்தவுடன் இளந்தாய்மார்களுக்கு இழந்த ஆற்றலை மீட்க வெந்தயக்களி கொடுப்பதுண்டு. அதற்குக் காரணம் உடலின் நீரிழப்பையும், சத்திழப்பையும் உடனே ஈடுசெய்வதற்காகும். அதுதரும் பலனையே கோதுமைப் பால் களியும் கொடுக்கும். உடலில் சத்து பற்றாத குழந்தைக்கும் கோதுமைப் பால்களி கொடுக்கலாம்.